ஷா ஆலம், நவ 17- இம்மாதம் 26 ஆம் தேதி தாக்கல் செய்யப்படவிருக்கும் 2022 ஆம் ஆண்டிற்கான வரவு செலவுத் திட்டத்தில் விளையாட்டாளர்கள் மற்றும் அடிப்படை வசதிகள் மேம்பாட்டிற்கு முக்கியத்துவம் அளிக்கப்படும் என சிலாங்கூர் மாநில விளையாட்டு மன்றம் (எம்.எஸ்.என்.) நம்பிக்கை கொண்டுள்ளது.
கடந்த ஈராண்டுகளாக நாட்டை உலுக்கி வரும் கோவிட்-19 பெருந்தொற்றினால் விளையாட்டாளர்களின் திறனும் அடிப்படை வசதிகளின் தரமும் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதாக எம்.எஸ்.என். நிர்வாக இயக்குநர் நிஸாம் மர்ஜூக்கி கூறினார்.
கல்வியைத் தொடர்வது மற்றும் நோய்த் தொற்றுக்குப் பின் பயிற்சியில் ஈடுபடுவதற்கான ஆர்வம் இல்லாது போனது போன்ற காரணங்களால் பல விளையாட்டாளர்களை தாங்கள் இழந்துள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
ஆகவே, இப்போது நாங்கள் தொடக்கத்திலிருந்து ஆரம்பிக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளோம். குறிப்பிட்ட சில விளையாட்டுகளில் தற்போதுள்ள விளையாட்டாளர்களுக்கு மாற்றாக புதிய விளையாட்டாளர்களை அடையாளம் காண வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது என்றார் அவர்.
பல விளையாட்டு சாதனங்களை பயன்படுத்த முடியாத சாத்தியமும் உள்ளது. காரணம், சில சாதனங்களுக்கு பயன்படுத்துவதற்கு குறிப்பிட்ட கால வரம்பு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. எங்களுக்கு நிதி ஒதுக்கீடு வழங்கப்படும் பட்சத்தில் இப்பிரச்சனைகளை சரி செய்ய முடியும் என்றார் அவர்.
சிலாங்கூர் மாநில அரசின் 2022 ஆம் ஆண்டிற்கான வரவு செலவுத் திட்டம் இம்மாதம் 26 ஆம் தேதி மாநில சட்டமன்றத்தில் தாக்கல் செய்யப்படவுள்ளது.


