ECONOMY

நாட்டில் அதிக உயிர்களைப் பறிக்கும் இஸ்கிமிக் இருதய நோய்- இந்தியர்கள் அதிக பாதிப்பு

17 நவம்பர் 2021, 3:06 AM
நாட்டில் அதிக உயிர்களைப் பறிக்கும் இஸ்கிமிக் இருதய நோய்- இந்தியர்கள் அதிக பாதிப்பு

கோலாலம்பூர், நவ 17 – கடந்த 2020 ஆம் ஆண்டில் மலேசியாவில் மரணத்திற்கான முதன்மை காரணமாக  இஸ்கிமிக் இதய நோய் உள்ளது. மருத்துவ சான்றுபடி பதிவு செய்யப்பட்ட 109,155  மரணங்களில்  18,515 இந்நோய் தொடர்புடையவையாகும்.

நாட்டில் இந்நோயினால் இறப்பவர்களில் அதிகமானவர்கள் இந்தியர்கள் என்பது அதிர்ச்சிளிக்கும் விஷயமாகும்.

கடந்த 2000 ஆம் ஆண்டில் 11.6 விழுக்காடாக இருந்த இந்நோய்த் தொடர்புடைய மரண எண்ணிக்கை 2020 ஆம் ஆண்டில் 17  விழுக்காடாக அதிகரித்துள்ளதாக தேசிய புள்ளிவிபரத் துறை தலைவர் டத்தோஸ்ரீ டாக்டர் முகமது உஸீர் மஹடின் கூறினார்.

 இந்நோயினால் மரணமடைந்தவர்களில் 12,707 பேர் அல்லது 68.6 விழுக்காட்டினர் ஆண்கள் என்றும் 5,808 பேர் அல்லது 31.4 விழுக்காட்டினர் பெண்கள் என்றும் அவர் கூறினார்.

மலேசியாவில் உள்ள அனைத்து இனங்களிலும் அதிக மரணங்கள் நிகழ்வதற்கு இந்நோய் பிரதான காரணமாக இருந்துள்ளது. 16.6 விழுக்காட்டு பூமிபுத்ராக்களும  16.0 விழுக்காட்டு சீனர்களும் 22.8  விழுக்காட்டு இந்தியர்களும் இந்த இருதய நோயினால் இறந்துள்ளனர் என்றார் அவர்.

ஆசியான் நாடுகளைப் பொறுத்த வரை சிங்கப்பூர், தாய்லாந்து மற்றும் பிலிப்பைன்ஸ் ஆகிய நாடுகளில் இஸ்கிமிக் இதய நோய்  முக்கிய ஆட்கொல்லி நோயாக விளங்குவதாக கூறிய அவர்,  அமெரிக்கா, ஜப்பான், இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா போன்ற வளர்ந்த நாடுகளிலும் இதேபோன்ற போக்கு காணப்படுகிறது என்றார்.

ஆரோக்கியமற்ற வாழ்க்கை முறை மற்றும் உணவுப் பழக்கம் ஆகியவை இஸ்கிமிக் இதய நோயால் அதிக மரணங்கள் நேர்வதற்கு காரணமாக இருப்பதாக அறிக்கை ஒன்றில் அவர் கூறினார்.

உடல் பருமன், நீரிழிவு போன்ற சுகாதார அம்சங்களைப் பொறுத்த வரை மலேசியா ஒரு ஆரோக்கியமான நாடு அல்ல என்று சுகாதார அமைச்சு கூறியதை உறுதிப்படுத்தும் வகையில் இந்த அறிக்கை அமைந்துள்ளது.

 பக்கவாதம் மற்றும் இருதய நோய் ஏற்படுவதற்கு இரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகம் இருப்பது, உயர் இரத்த அழுத்தம், மற்றும் அதிக கொலஸ்ட்ரோல் போன்றவை காரணமாக உள்ளதாக 2019 ம் ஆண்டு தேசிய உடல் நலம் மீதான ஆய்வு கூறுவதாக முகமது உஸீர் கூறினார்.

 

 

 

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.