கோலாலம்பூர், நவ 16- ஊக்கத் தடுப்பூசியை முன்பதிவின்றி நேரில் சென்று பெறுவதற்கு அனுமதிப்பதா என்பது குறித்து இன்று மாலை முடிவெடுக்கப்படும்.
வருகைக்கான முன்பதிவு வழங்கப்பட்ட 40 விழுக்காட்டினர் ஊக்த் தடுப்பூசியை பெறுவதற்கு வரத் தவறியதால் இந்நடவடிக்கை எடுக்கப்படுவதாக சுகாதார அமைச்சர் கைரி ஜமாலுடின் கூறினார்.
இன்று மாலை கோவிட்-19 தடுப்பூசி நடவடிக்கை அமைப்பின் கூட்டத்திற்கு தலைமையேற்கிறேன். ஊக்கத் தடுப்பூசியைப் பெற விரும்புவோர் குறித்து இக்கூட்டத்தில் முடிவெடுக்கப்படும் என்றார் அவர்.
இன்று இங்கு ஹெப்படைட்டிஸ் பி சிகிச்சை மையமாக மலேசியாவை பிரபலப்படுத்தும் நிகழ்வுக்குப் பின்னர் செய்தியாளர்களிடம் அவர் இதனைத் தெரிவித்தார்.
கோவிட்-19 தடுப்பூசித் திட்டத்தின் (பிக்) கீழ் வருகைக்கான முன்பதிவு வழங்கப்பட்டவர்களில் 40 விழுக்காட்டினர் தடுப்பூசி பெற வரத் தவறியதை கருத்தில் கொண்டு அரசாங்கம் எடுக்கவுள்ள அடுத்தக் கட்ட நடவடிக்கை அல்லது கொள்கை குறித்து நிருபர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கையில் அவர் இவ்வாறு கூறினார்.
ஊக்கத் தடுப்பூசியைப் பெறுவோரின் எண்ணிக்கை குறையும் பட்சத்தில் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்படும் கோவிட்-19 நோயாளிகளின் எண்ணிக்கை உயர்வதற்கான அபாயம் ஏற்படும் என கருதப்படுகிறது.


