ஷா ஆலம், செப் 3- சிலாங்கூரில் குறைந்தது 30,000 ரூமா இடாமான் குடியிருப்புகள் நிர்மாணிக்கப்படவுள்ளன. இத்திட்டத்தின் மூலம் தரமான மற்றும் கட்டுபடி விலையிலான வீடுகளை பெறுவதற்குரிய வாய்ப்பு மாநில மக்களுக்கு ஏற்படும்.
கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த பகுதிகளான பண்டார் சவுஜானா புத்ரா, ஷா ஆலம், பூச்சோங், சைபர்சவுத், புஞ்சாக் ஆலம் ஆகிய இடங்களில் இந்த வீடுகள் நிர்மாணிக்கப்படும் என்று இடாமான் சிலாங்கூர் அகப்பக்கம் கூறியது.
சிலாங்கூரில் தங்கி வேலை செய்து வருவோர் சொந்த வீடுகளைப் பெறுவதற்கு ஏதுவாக ஆறு இடாமான் வீடமைப்புத் திட்டங்கள் உருவாக்கப்படும் என்று மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி கடந்த மாதம் 27 ஆம் தேதி கூறியிருந்தார்.
ஆயிரம் சதுரஅடி பரப்பளவிலான இந்த வீடுகள் மூன்று அறைகள், இரண்டு குளியறைகள் கொண்டிருக்கும் என்றும் இவ்வீடுகள் 250,000 வெள்ளி விலையில் விற்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டிருந்தார்.
இந்த வீடுகள் ஐ.பி.எஸ். எனப்படும் முன்கூட்டியே பாகங்கள் தயாரிக்கப்பட்டு பொருந்தப்படும் முறையில் நிர்மாணிக்கப்படும். தவிர இந்த வீடுகள் தொலைக்காட்சி, குளிர்பதனப் பெட்டி மற்றும் அலமாரி போன்ற வசதிகளையும் கொண்டிருக்கும்.


