கிள்ளான், நவ 3- இங்கு, லிட்டில் இந்தியா பகுதியிலுள்ள பாடாங் செட்டி திடலின் பெயரை டத்தாரான் பெர்பண்டாரான் கிளாங் (எம்.பி.கே.) என மாற்றுவது அப்பகுதியின் வரலாற்று மதிப்பை பாதிக்காது என்று மந்திரி புசார் டத்தோ ஸ்ரீ அமிருடின் ஷாரி கூறினார்.
மாறாக, சுற்றுலாப் பயணிகளைக் கவரும் வகையில் இந்த இடத்தின் தனித்துவத்துவம் முன்னிலைப்படுத்தப்படும் என்று அவர் சொன்னார். சிலாங்கூரின் முக்கியமான பாரம்பரியத்தின் ஒரு பகுதியாக கிள்ளான் நகர் விளங்குகிறது. இது தவிர, பாரம்பரியமிக்க சுற்றுலா மையமாகவும் இது திகழ்கிறது.
எனவே, அந்த இடத்தின் பெயருக்கு மட்டும் இல்லாமல், பாரம்பரியத்தின் பின்னணிக்கும் முக்கியத்துவம் அளிக்கப்பட வேண்டும் என்னார் அவர். இவ்விடத்தின் வரலாறு பெரியது. ஆனால், பாடாங் செட்டியின் பெயரை நாங்கள் மறக்கவில்லை, இது அனைத்துத் தரப்பினருக்கும் பயனளிப்பதாகவும் உணர்ச்சிகரமான விஷயங்களை குறைக்கும் வகையிலும் அமைவது முக்கியம் என்று அவர் கூறினார்.
நேற்று, ஜாலான் துங்கு கிளானா, லிட்டில் இந்தியா பகுதியில் தீபாவளி ஏற்பாடுகளை பார்வையிட்டப் பின்னர் செய்தியாளர்களிடம் அவர் இவ்வாறு கூறினார். பாடாங் செட்டி என்ற பெயரை டத்தாரான் பெர்பண்டாரான் கிளாங் என மறுபெயரிடுவதற்கு சிலாங்கூர் சுல்தான் ஷரபுடீன் இட்ரிஸ் ஷா அல்ஹாஜ் ஒப்புதல் அளித்துள்ளதாக கிள்ளான் நகராண்மைக் கழகத் தலைவர் டாக்டர் அகமது பட்ஸ்லி அகமது தாஜூடின் கடந்த ஜூன் மாதம் கூறியிருந்தார். கிள்ளான் பாரம்பரிய பாதை திட்டத்தின் ஒரு பகுதியாக பாடாங் செட்டி பட்டியலிடப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டிருந்தார்.


