ஷா ஆலம், நவ 3- சிலாங்கூர் டியூஷன் ராக்யாட் (பி.டி.ஆர்.எஸ்.)திட்ட மாணவர்களுக்கு மேலும் 2,500 இலவச இணைய சேவைக்கான சிம் கார்டுகளை மாநில அரசு வழங்குகிறது.
மாணவர்கள் தொடர்பான தரவுகள் திரட்டப்பட்டப் பின்னர் இம்மாதத்தில் இந்த சிம் கார்டுகள் சம்பந்தப்பட்ட மாணவர்களுக்கு வழங்கப்படும் என்று எம்.பி.ஐ. எனப்படும் மந்திரி புசார் கழகத்தின் நிறுவன சமூக கடப்பாட்டு பிரிவுத் தலைவர் அகமது அஸ்ரி ஜைனால் நோர் கூறினார்.
கோவிட்-19 நோய்த் தொற்று காரணமாக தாய், தந்தை இருவரையும் இழந்த ஐந்து சகோதர்களுக்கு கையடக்க கணினிகள் மற்றும் இலவச சிம் கார்டுகளை வழங்கியப் பின்னர் செய்தியாளர்களிடம் அவர் இதனைத் தெரிவித்தார்.
தகுதி உள்ள பொதுமக்களுக்கு வழங்குவதற்கு எதுவாக மாநிலத்திலுள்ள ஒவ்வொரு சட்டமன்றத் தொகுதிக்கும் 5,000 இலவச சிம் கார்டுகள் வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் சொன்னார்.
இது தவிர, குறைந்த வருமானம் பெறும் உயர்கல்வி மாணவர்கள் மற்றும் இடைநிலைப்பள்ளி மாணவர்களுக்கு மடிக்கணினிகள் மற்றும் கையடக்க கணினிகளை வழங்கியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
கோவிட்-19 நோய்த் தொற்று பரவலால் பாதிக்கப்பட்ட பல்வேறு தரப்பினருக்கு உதவும் வகையில் சிலாங்கூர் அரசு 70,000 இலவச இணைய சேவைக்கான சிம் கார்டுகளை விநியோகிக்கவுள்ளதாக மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி கடந்த ஆகஸ்டு மாதம் கூறியிருந்தார்.


