செர்டாங், 2- நேற்று பிற்பகல் முதல் பெய்த கனத்த மழை காரணமாக ஸ்ரீ கெம்பாங்கான் அருகே உள்ள ஸ்ரீ செர்டாங் தேசிய பள்ளியில் ஏற்பட்ட திடீர் வெள்ளத்தில் 32 ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் சிக்கினர்.
பாதிக்கப்பட்டவர்களில் 18 ஆசிரியர்களும் 14 மாணவர்களும் அடங்குவர் என்று சிலாங்கூர் தீயணைப்பு மற்றும் மீட்புத் துறையின் இயக்குநர் நோரஸாம் காமிஸ் தெரிவித்தார்.
இந்த வெள்ளத்தில் 13 ஆசிரியைகள், ஐந்து ஆசிரியர்கள், 11 மாணவர்கள் மற்றும் மூன்று மாணவிகள் சிக்கினர். மீட்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன என்று அவர் அறிக்கை ஓன்றில் தெரிவித்துள்ளார்.
இதற்கிடையில், தாமான் செர்டாங் ராயாவில் ஏற்பட்ட திடீர் வெள்ளத்தில் தனியாக வசித்து வந்த நடமாட முடியாத நிலையிலுள்ள பெண்ணை தாங்கள் தாமான் செர்டாங் ராயாவிலுள்ள அவரது வீட்டிலிருந்து மீட்டதாகவும் அவர் கூறினார்.
மாலை 6.17 மணியளவில் அச்சம்பவம் பற்றிய தகவல் கிடைத்தைத் தொடர்ந்து 58 வயதுடைய மூதாட்டியை தாங்கள் விரைந்து சென்று காப்பாற்றியதாக அவர் மேலும் தெரிவித்தார்.
சம்பவத்தின் போது வெள்ள நீரின் அளவு 0.30 மீட்டராக இருந்தது, தற்போது நிலைமை சீரடைந்து வருகிறது என்றார் அவர்.
ஸ்ரீ செர்டாங் பள்ளியில் சிக்கியிருந்த அனைவரும் இரவு 9 மணியளவில் மீட்கப்பட்டதாகவும் இரவு 10.00 மணி நிலவரப்படி வெள்ள நிலைமை சீரடைந்ததாகவும் அவர் குறிப்பிட்டார்.


