கோலாலம்பூர், நவ 1- அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் கோவிட்-19 ஊக்கத் தடுப்பூசியைச் செலுத்தும் பணியை சுகாதார அமைச்சு வரும் செவ்வாய்க் கிழமை தொடங்கும்.
இந்த தடுப்பூசியைச் செலுத்தும் நடவடிக்கை காலை 9.30 மணி தொடங்கி நாடாளுமன்றக் கட்டிடத்தின் பிரதான மண்டபத்தில் நடைபெறும் என்று மக்களவை சபாநாயகர் டத்தோ முகமது ரஷிட் ஹஸ்னோன் கூறினார்.
மக்களுடன் அணுக்கமாக பழகக்கூடிய மற்றும் நோய்த் தொற்றினால் பாதிக்கப்படும் அபாயத்தை அதிகம் கொண்ட மாண்புமிகு நாடாளுமன்ற உறுப்பினர்களை பாதுகாப்பதற்காக சுகாதார அமைச்சு ஊக்கத் தடுப்பூசிகளைச் செலுத்தவிருக்கிறது என்று அவர் சொன்னார்.
இதனிடையே, வரும் 4 ஆம் தேதி வியாழக்கிழமை தீபாவளி பண்டிகை கொண்டாடப்படவிருப்பதை முன்னிட்டு புதன் கிழமை நாடாளுமன்றக் கூட்டம் காலை 10.00 மணி முதல் பிற்பகல் 2.00 மணி வரை மட்டுமே நடைபெறும் .
தீபாவளியைக் கொண்டாடுவதற்காக நாடாளுமன்ற உறுப்பினர்கள் தங்களுக்கு தொகுதிகளுக்குச் செல்வதற்கு ஏதுவாக இந்நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது என்று டத்தோ முகமது ரஷிட் தெரிவித்தார்.


