ஷா ஆலம், நவ 1- செல்கேர் நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ கிளினிக்குகளில் சிலாங்கூர் அரசின் தடுப்பூசித் திட்டம் இன்று தொடங்கி சிலாங்கூர் மற்றும் பேராக்கில மேற்கொள்ளப்படுகிறது.
கோவிட்-19 தடுப்ப்பூசியை பெறுவதிலிருந்து மாநில மக்கள் விடுபடாமலிருப்பதை உறுதி செய்யும் நோக்கில் இத்திட்டம் அமல்படுத்தப்படுகிறது.
காஜாங், பத்தாங் காலி, கோல சிலாங்கூர், சுங்கை பெசார், பண்டார் மக்கோத்தா செராஸ், புக்கிட் சங்காங், பூச்சோங், கோம்பாக் மற்றும் பேராக் மாநிலத்தின் தஞ்சோங் மாலிம் ஆகிய இடங்களில் இந்த தடுப்பூசி இயக்கம் நடைபெறும்.
மலேசியர்கள் மற்றும் இங்கு தங்கியிருக்கும் அந்நிய நாட்டினர் இந்த வாய்ப்பினை பயன்படுத்தி தடுப்பூசி பெற்றுக் கொள்ளலாம் என்று சுகாதாரத் துறைக்கான ஆட்சிக்குழு உறுப்பினர் டாக்டர் சித்தி மரியா மாமுட் கூறினார்.
மேலும் 12 வயதுக்கும் மேற்பட்ட இளையோர், முதல் டோஸ் தடுப்பூசியைப் பெறுவதற்கு முன்பதிவு செய்து காத்திருப்பவர்கள், இரண்டாவது டோஸ் தடுப்பூசியைப் பெறுவதற்கான தேதியை தவறவிட்டவர்கள் இந்த வாய்ப்பினை பயன்படுத்திக் கொள்ளுமாறு அவர் கேட்டுக் கொண்டார்.
சுகாதார அமைச்சின் அனுமதியுடன் இளையோருக்கான தடுப்பூசித் திட்டத்திதை மேற்கொள்வதற்காக சிலாங்கூர் அரசு 150,000 சினோவேக் தடுப்பூசிகளை தயார் செய்துள்ளதாக மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி கடந்த மாதம் 7 ஆம் தேதி கூறியிருந்தார்.


