ஷா ஆலம், அக் 29- சிலாங்கூரிலுள்ள 12 முதல் 17 வயது வரையிலான இளையோரை இலக்காகக் கொண்ட செல்வேக்ஸ் தடுப்பூசித் திட்டம் நாளை அப்பாட்மெண்ட் புளோரா டாமன்சாரா, புளோக் ஜி சமூக மண்டபத்தில் நடைபெறவுள்ளது.
இந்த தடுப்பூசித் திட்டத்தில் பங்கு கொள்ள விரும்புவோர் செலங்கா செயலியில் VAX எனும் பட்டனைத் அழுத்தி AFD30OCT என்ற பற்றுச் சீட்டு குறியீட்டு எண்ணை பதிவிட வேண்டும்.
இந்த தடுப்பூசித் திட்டத்தில் உள்நாட்டினர் மற்றும் அந்நிய பிரஜைகளும் பங்கேற்கலாம். முதலாவது தடுப்பூசியை இன்னும் பெறாதவர்கள் மற்றும் இரண்டாவது தடுப்பூசிக்கான தேதியை தவறவிட்டவர்கள் இத்திட்டத்தில் பதிவு செய்து கொள்ளலாம் என்று சுகாதாரத் துறைக்கான ஆட்சிக்குழு உறுப்பினர் டாக்டர் சித்தி மரியா மாமுட் சமூக ஊடகங்களில் பகிர்ந்து கொண்ட பிரசுரம் ஒன்றில் குறிப்பிடப்பட்டுள்ளது.
கடந்த 24 ஆம் தேதி முதல் மேற்கொள்ளப்படும் இந்த இளையோருக்கான செல்வேக்ஸ் திட்டத்தின் கீழ் பத்தாயிரம் பேருக்கு தடுப்பூசி செலுத்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
சுகாதார அமைச்சின் ஒப்புதலுடன் மேற்கொள்ளப்படும் இளையோருக்கான செல்வேக்ஸ் திட்டத்திற்கு மாநில அரசு 150,000 தடுப்பூசிகளை ஏற்பாடு செய்துள்ளதாக மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி கடந்த 7 ஆம் தேதி கூறியிருந்தார்.


