ஷா ஆலம், அக் 29- கட்டுபடி விலையில் தரமான வீடுகளை வாங்குவதற்குரிய வாய்ப்பினை ரூமா இடாமான் திட்டம் சிலாங்கூர் மக்களுக்கு வழங்குவதாக மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி கூறினார்.
அந்த வீடுகள் பல்வேறு அடிப்படைவசதிகளை மட்டுமின்றி அமைதியான சூழலில் வசிப்பதற்கு உகந்த சூழலையும் கொண்டுள்ளது என்று அவர் சொன்னார்.
சிலாங்கூரில் தங்கி வேலை செய்வோர் சொந்த வீட்டைப் பெறுவதற்கு ஏதுவாக மாநிலத்தில் ஆறு ரூமா இடாமான் வீடமைப்புத் திட்டங்கள் உருவாக்கப்படும் என்று கடந்த 27 ஆம் தேதி அவர் கூறியிருந்தார்.
ஷா ஆலம், பண்டார் சவுஜானா புத்ரா, பூச்சோங், சைபர்சவுத் மற்றும் பண்டார் புஞ்சா ஆலம் ஆகிய பகுதிகளில் இந்த வீடமைப்புத் திட்டங்கள் உருவாக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.
தொலைக்காட்சி, குளிர்பதனப் பெட்டி அலமாரி உள்ளிட்ட அடிப்படை வசதிகளுடன் ஆயிரம் சதுர அடிப் பரப்பளவைக் கொண்ட இந்த வீடுகள் இரண்டரை லட்சம் வெள்ளி விலையில் விற்கப்படுகின்றன.
அடுத்த நான்கு ஆண்டுகளில் 41 ரூமா சிலாங்கூர் கூ மற்றும் ரூமா இடாமான் ஹராப்பான் திட்டங்கள் வாயிலாக 80,650 வீடுகள் நிர்மாணிக்கப்படும் என்று கடந்த மே மாதம் 2 ஆம் தேதி அமிருடின் கூறியிருந்தார்.
அவற்றில் 77,000 வீடுகள் பொதுமக்களுக்கு விற்கப்படும் வேளையில் எஞ்சிய வீடுகள் விவேக வாடகை கொள்முதல் திட்டத்தை அமல்படுத்துவதற்காக மாநில அரசிடம் ஒப்படைக்கப்படும் என்றும் அவர் தெரிவித்திருந்தார்.


