கோலக் கிள்ளான், அக் 29- சுத்தமான குடிநீரை பொது மக்களுக்கு விநியோகிக்கும் விஷயத்தில் சிலாங்கூர் அரசு ஒரு போதும் சமரசம் செய்து கொள்ளாது.
சுகாதார அமைச்சு மற்றும் உலக சுகாதார நிறுவனம் வகுத்துள்ள தர நிர்ணயத்திற்கேற்ப விநியோகிக்கடும் நீரின் தரம் உள்ளதை அது தொடர்ந்து உறுதி செய்து வரும்.
பொதுமக்களுக்கு விநியோகிக்கப்படும் நீர் உண்மையிலே சுத்தமானதாக இருப்பதை ஆயர் சிலாங்கூர் நிறுவனம் தொடர்ந்து உறுதி செய்து வருவதாக அடிப்படை மற்றும் பொது வசதிகள் துறைக்கான ஆட்சிக்குழு உறுப்பினர் இஞ்சினியர் இஷாம் ஹஷிம் கூறினார்.
ராசாவ் நீர் விநியோகத் திட்டத்தின் கீழ் கிள்ளான் ஆற்று நீரை சுத்திகரிப்பதற்கு பயன்டுத்தப்படும் ஒஸோன் தொழில்நுட்பம் அதிநவீனமானது என்பதோடு அதிக செலவும் பிடிக்கக் கூடியது என்று அவர் சொன்னார்.
இந்த தொழில்நுட்பம் சிறப்பானதாகவும் நீரை சுத்தப்படுத்தி நீரில் கலந்துள்ள வாடையை போக்கும் தன்மையைக் கொண்டுள்ளதையும் நான் நேரில் பார்த்து தெரிந்து கொண்டேன். நீர் சுத்திகரிப்பு மையங்களில் இந்த தொழில்நுட்பம் பயன்படுத்தப்படும் என்று அவர் தெரிவித்தார்.
அதிக செலவு பிடிக்கக்கூடிய இந்த ஓஸோன் தொழில்நுட்பம் அதிகச் செலவிலானது. அமெரிக்காவில் இந்த தொழில்நுட்பம் பரவலாக பயன்படுத்தப்படுகிறது. மலேசியாவில் ஆயர் சிலாங்கூர் நிறுவனம் இந்த தொழில்நுட்பத்தை ஒரு முன்னோடித் திட்டமாக அறிமுகப்படுத்துகிறது என்றார் அவர்.
நேற்று இங்குள்ள மேங்குருவ் பாய்ண்ட் சதுப்பு நில பூங்காவுக்கு வருகை புரிந்த பின்னர் செய்தியாளர்களிடம் அவர் இதனைத் தெரிவித்தார்.


