புத்ரா ஜெயா, அக் 28- வரும் நவம்பர் மாதம் முதல் தேதிக்குள்ள கோவிட்-19 தடுப்பூசியைச் செலுத்திக் கொள்ளும்படி அனைத்து அரசாங்க ஊழியர்களுக்கும் பொதுச் சேவைத் துறை தலைமை இயக்குநர் டான்ஸ்ரீ முகமது கைருள் அடிப் அப்துல் ரஹ்மான் உத்தரவிட்டுள்ளார்.
நாட்டில் பெரும் எண்ணிக்கையிலான அரசு ஊழியர்கள் தடுப்பூசி செலுத்திக் கொண்ட வேளையில் சிறிய எண்ணிக்கையிலானோர் மட்டுமே தடுப்பூசிக்கு இன்னும் பதிவு செய்யாமலிருப்பதாக அவர் சொன்னார்.
இன்று காலை இயங்கலை வாயிலாக நடைபெற்ற பொதுச் சேவைத் துறையின் மாதாந்திர ஒன்று கூடும் நிகழ்வில் உரையாற்றிய போது அவர் இவ்வாறு தெரிவித்தார்.
எனினும், இந்த சிறிய எண்ணிக்கை அரசாங்கத்தின் கோவிட்-19 தடுப்பூசித் திட்டத்திற்கு கடும் விளைவுகளையும் அரசாங்க ஊழியர்கள் மீது எதிர்மறையான கண்ணோட்டத்தையும் ஏற்படுத்தும் என்பதோடு அவர்களின் சேவைத் திறனையும் பாதிக்கும் என்று அவர் கூறினார்.
அரசாங்கத்தின் திட்டங்களுக்கு ஆதரவளிக்கும் கடப்பாட்டை அரசு ஊழியர்கள் கொண்டிருப்பதோடு தடுப்பூசித் திட்டத்தின் ஆக்கத் தன்மை மீது மக்களுக்கு நம்பிக்கையை ஏற்படுத்தும் பொறுப்பும் அவர்களுக்கு உள்ளது என்றார் அவர்.
அரசு ஊழியர்கள் சம்பந்தப்பட்ட தடுப்பூசித் திட்டம் மீதான புதிய கொள்கை நவம்பர் முதல் தேதி அமலுக்கு வந்தவுடன் தடுப்பூசியைப் பெறத் தவறிய அரசாங்க ஊழியர்களுக்கு எதிராக ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் அல்லது அவர்களின் சேவை முடிவுக்கு கொண்டு வரப்படும் என அவர் குறிப்பிட்டார்.


