MEDIA STATEMENT

சிலாங்கூர் தடகளச் சங்கத்திற்கு நானே தலைவர்- டத்தோ முத்து கூறுகிறார்

26 அக்டோபர் 2021, 4:36 AM
சிலாங்கூர் தடகளச் சங்கத்திற்கு நானே தலைவர்- டத்தோ முத்து கூறுகிறார்

கோலாலம்பூர், அக் 26- சிலாங்கூர் தடகளச் சங்கத்திற்கு நானே அதிகாரப்பூர்வத் தலைவர் என்று டத்தோ எஸ்.எம். முத்து அறிவித்துள்ளார். இதன் வழி அந்த விளையாட்டுச் சங்கத்தின் தலைமைத்துவம் தொடர்பான சர்ச்சை மேலும் சூடு பிடிக்கத்  தொடங்கியுள்ளது.

சங்கத்திற்குச் சொந்தமான 110,000 வெள்ளி முறைகேடு தொடர்பில் நேற்று முன்தினம் நடத்தப்பட்ட சிறப்பு பொதுக் கூட்டத்தில் தம்மை சங்கத் தலைவர் பதவியிலிருந்தும் அடிப்படை உறுப்பினர் அந்தஸ்திலிருந்தும் நீக்குவதற்கு எடுக்கப்பட்ட முடிவு  செல்லுபடியாகாது என்று மலேசிய தடகளச் சங்கத்தின் தலைவருமான அவர் சொன்னார்.

அந்த கூட்டத்தில் கலந்து கொண்டவர்கள் சங்கத்தின் உறுப்பினர்கள் அல்ல என்பதோடு சிறப்பு பொதுக் கூட்டத்தைக் கூட்டி யாரையும் பதவி நீக்கம் செய்வதற்கு சிலாங்கூர் தடகளச் சங்கத்தின் அமைப்பு விதிகள் அனுமதிக்கவில்லை என்றும் அவர் தெரிவித்தார்.

மாநில தடகளச் சங்கத்தின் நிதியை நான் துஷ்பிரயோகம் செய்ததாக சுமத்தப்பட்ட குற்றச்சாட்டு அவதூறானது. எனது பெயருக்கு களங்கத்தை ஏற்படுத்தும் நோக்கில் குரோத எண்ணத்துடனும் பொறுப்பற்ற முறையிலும்  மேற்கொள்ளப்படும் முயற்சியாகும். எனக்கு தெரிந்தவரை அந்த பணம் சிலாங்கூர் தளகளச் சங்கத்தின் வங்கி கணக்கில்தான் உள்ளது என்றார் அவர்.

வரும் நவம்பர் மாதம் 7 ஆம் தேதி நடைபெறவிருக்கும் தேர்தலில் தலைவர் பதவியை தக்க வைத்துக் கொள்வதற்கு  தாம் போட்டியிடுவதை தடுக்கும் நோக்கில் இந்த கீழறுப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது என்றும் அவர் குற்றஞ்சாட்டினார்.

இவ்விவகாரம் தொடர்பில் நேற்று மாலை டாங் வாங்கி போலீஸ் தலைமையகத்தில் புகார் செய்தப் பின்னர் செய்தியாளர்களிடம் அவர் இதனைத் தெரிவித்தார்.

நேற்று முன்தினம் நடத்தப்பட்ட சங்கத்தின் அவசரக் கூட்டத்தில் கலந்து கொண்ட 39 உறுப்பினர்களும் டத்தோ முத்துவை சங்க தலைவர் பதவியிலிருந்து நீக்கவும் அவரின் உறுப்பியத்திற்கு ஆயுள்காலத் தடை விதிக்கவும் தீர்மானம் நிறைவேற்றினர். மேலும் 110,000 வெள்ளி முறைகேடு தொடர்பில் போலீஸ் மற்றும் விளையாட்டு ஆணையத்தில் புகார் செய்யவுள்ளதாகவும் அவர்கள் கூறியிருந்தனர்.

 

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.