ஷா ஆலம், அக் 8- கம்போங் பாரு பண்டார் பந்திங்கில் ஜாலான் சுங்கை லங்காட்டில் நீர் மாசுபாடு ஏற்பட்டச் சம்பவம் தொடர்பில் லுவாஸ் எனப்படும் சிலாங்கூர் மாநில நீர் நிர்வாக வாரியம் இரு குற்றத் தகவல் அறிக்கைகளை வெளியிட்டுள்ளது.
மாடுகள் மற்றும் செம்மறியாடுகள் வளர்ப்போர் நீர் தூய்மைக் கேட்டை ஏற்டுத்தும் பொருள்களை சுங்கை பெர்மாத்தாங்கில் கலந்தது தொடர்பில் அந்த குற்றத் தகவல் அறிக்கைகள் வெளியிட்டப்பட்டதாக அந்த வாரியம் கூறியது.
கோல லங்காட் கால்நடை வளர்ப்பு துறையிடமிருந்து கடந்த செப்டம்பர் மாதம் 30 ஆம் தேதி புகார் கிடைத்ததைத் தொடர்ந்து நடவடிக்கை மேற்கொண்ட அந்த வாரியம், அந்த பண்ணையில் உள்ள மூன்று கழிவு நீர் குளங்களை முறையாக பராமரிப்பதோடு அதன் கரைகளை உயர்த்தும்படி உத்தரவிட்டது.
அப்பகுதியில் நீர் மாசுபாட்டைக் குறைப்பதற்கு ஏதுவாக கால் நடைகளுக்கு வழங்கப்படும் நீர் மற்றும் கழிவு நீர் குளங்களில் இம்.எம். எனப்படும் பொருளை கலக்கும்படி அப்பண்ணைகளுக்கு உத்தரவிட்டப்பட்டது என்று அது மேலும் தெரிவித்தது.
நீர் மாசுபாடு ஏற்படுவதை தவிர்ப்பதற்காக ஆற்றோரங்களில் நடைபெறும் சந்தேகத்திற்குரிய நடவடிக்கைகள் தொடர்பில் தங்களுக்கு புகார் அளிக்கும்படி அந்த வாரியம் பொதுமக்களை கேட்டுக் கொண்டது.


