ஷா ஆலம், அக் 8- புக்கிட் பெருந்தோங், தாமான் பூங்கா ராயா திட்டத்தில் 101 இரட்டை மாடி வரிசை வீடுகளின் நிர்மாணிப்பு பணி முழுமையடைந்துள்ளது.
சிலாங்கூர் கூ திட்டத்தின் டி பிரிவை சேர்ந்த 1,000 சதுர அடி பரப்பளவிலான இந்த வீடுகள் 250,000 வெள்ளி விலையில் விற்கப்படுவதாக வீடமைப்பு மற்றும் நகர்புற நல்வாழ்வுத் துறைக்கான ஆட்சிக்குழு உறுப்பினர் ரோட்சியா இஸ்மாயில் கூறினார்.
நான்கு அறைகள் , மூன்று குளியலறைகள் உள்ளிட்ட வசதிகளைக் கொண்ட இந்த கட்டுபடி விலையிலான வீடுகள் இவ்வட்டார மக்கள் சௌர்கர்யமாக வாழ்வதற்குரிய உகந்த சூழலை உருவாக்கித் தரும் என்று அவர் நம்பிக்கைத் தெரிவித்தார்.
சொந்த வீட்டைப் பெறுவதற்கு மக்கள் பெரும் போராட்டம் நடத்துவதை காண முடிகிறது. மக்கள் குறிப்பாக பி40 பிரிவைச் சேர்ந்தவர்கள் கட்டுபடி விலையிலாக வீடுகளை வாங்குவதை உறுதி செய்வதில் தீவிர முயற்சி மேற்கொண்டு வருகிறது என்று அவர் சொன்னார்.
சிலாங்கூர் மாநில அரசின் கோரிக்கையை ஏற்று பி40 மற்றும் எம்40 பிரிவினருக்காக இந்த கட்டுபடி விலையிலான வீடுகளை நிர்மாணித்துத் தந்த எம்.கே. லேண்ட் நிறுவனத்திற்கு தாம் நன்றி கூறிக் கொள்வதாகவும் அவர் குறிப்பிட்டார்.
எம்.கே.லேண்ட் நிறுவனத்தின் இந்த நம்பகத்தன்மை காரணமாக எதிர்காலத்தில் அதிகளவிலான கட்டுபடி விலை வீடுகளை நிர்மாணிப்பதற்குரிய வாய்ப்பு கிட்டும் என மாநில அரசு நம்புகிறது என்றும் அவர் குறிப்பிட்டார்.


