பண்டார் பாரு பாங்கி, அக் 8- கோவிட்-19 பெருந்தொற்று காரணமாக பாதிக்கப்பட்ட விவசாயிகள் மற்றும் கால்நடை வளர்ப்போருக்கு உதவ சிலாங்கூர் மாநில அரசு கித்தா சிலாங்கூர் 2.0 திட்டத்தின் கீழ் 34 லட்சம் வெள்ளியை ஒதுக்கியுள்ளது.
சந்தையில் அதிகப்படியாக உள்ள விளைபொருள்களை வாங்க வகை செய்யும் சிலாங்கூர் விவசாய பரிவுத் திட்டமும் இதில் அடங்கும் என்று விவசாயம் மற்றும் விவசாய அடிப்படை தொழில்துறைக்கான ஆட்சிக்குழு உறுப்பினர் இஞ்சினியர் இஷாம் ஹஷிம் கூறினார்.
தற்போது விளைபொருள்கள் சந்தையில் அதிகப்படியாக உள்ளது தொடர்பில் எந்த புகாரும் வரவில்லை. நிலைமை தற்போது சீரடைந்து விட்ட நிலையில் உற்பத்தியைப் பெருக்குவதற்கான நடவடிக்கையில் தீவிரம் காட்டி வருகிறோம் என்றார் அவர்.
இங்குள்ள செக்சன் 8 பிரிமா சமூக வேளாண் தோட்டத்திற்கு வருகை புரிந்தப் பின்னர் செய்தியாளர்களிடம் அவர் இதனைத் தெரிவித்தார்.
முன்னதாக அவர், கித்தா சிலாங்கூர் 2.0 திட்டத்தின் கீழ் உலு லங்காட் மாவட்டத்தில் மீன் வளர்ப்பில் ஈடுபட்டுள்ள 39 பேருக்கு மீன் தீவன பற்றுச் சீட்டுகளை வழங்கினார்.
மீன் வளர்ப்போர் எதிர் நோக்கும் சிரமங்களைக் குறைக்கும் நோக்கில் இந்த பற்றுச் சீட்டுகள் வழங்கப்படுவதாக இஷாம் தெரிவித்தார்.
மீன் வளர்ப்போக்கு மீன் தீவினங்களும் விவசாயிகளுக்கு உரமும், மீனவர்களுக்கு பெட்ரோலுக்கான உதவித் தொகையும், மாடு வளர்ப்போருக்கு கால்நடைத் தீவனமும் வழங்கப்படுகிறது என்றார் அவர்.


