ஷா ஆலம், அக் 8- ஷா ஆலம் வட்டாரத்தில் ஏற்படும் வெள்ளப் பிரச்னையைக் களைவதற்கான உடனடி நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு ஷா ஆலம் மாநகர் மன்றம் 70 லட்சம் வெள்ளியை ஒதுக்கீடு செய்துள்ளது.
நீரை வெளியேற்றுவதற்கு ஏதுவாக கூடுதலான பம்ப் கருவிகளை வாங்குவதற்கு இந்த நிதி ஒதுக்கீடு பயன்படுத்தப்படும் என்று நேற்று முன்தினம் நடைபெற்ற விளக்கமளிப்பின் போது ஷா ஆலம் மாநகர் மன்றம் தெரிவித்ததாக மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி கூறினார்.
இந்த நிதி ஒதுக்கீட்டின் வழி செக்சன் 13, செக்சன் 7 மற்றும் இதரப் பகுதிகளில் ஏற்படக்கூடிய திடீர் வெள்ளப் பிரச்சனைக்கு தீர்வு காண முடியும் என்று அவர் நம்பிக்கைத் தெரிவித்தார்.
இதரப் பிரச்சனைகளைத் தீர்ப்பதற்கு தேவையான நீதி ஒதுக்கீட்டை மாநகர் மன்றம் தற்போது மதிப்பீடு செய்து வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
கடந்த மாதம் 26 ஆம் தேதி பெய்த அடைமழையில் பத்து தீகா, செக்சன் 4, செக்சன் 10, செக்சன் 13, செக்சன் 25 உள்ளிட்ட பகுதிகளில் திடீர் வெள்ளம் ஏற்பட்டது.
இதனிடையே, மாநிலத்தில் வெள்ளப் பிரச்னையைக் களைவதற்கான 98 கால்வாய் சீரமைப்புத் திட்டங்களை மேற்கொள்வதற்காக 12 வது மலேசியத் திட்டத்தில் 53 கோடியே 30 லட்சம் வெள்ளி ஒதுக்கப்பட்டுள்ளதாக அமிருடின் சொன்னார்.


