கோலாலம்பூர், அக் 7- நாட்டிலுள்ள பெரியவர்களில் 88.8 விழுக்காட்டினர் அல்லது 2 கோடியே 7 லட்சத்து 86 ஆயிரத்து 568 பேர் கோவிட்-19 தடுப்பூசியை முழுமையாகப் பெற்றுள்ளனர்.
நாட்டிலுள்ள பெரியவர்களில் 90 விழுக்காட்டினர் தடுப்பூசியை முழுமையாகப் பெறுவதை உறுதி செய்யும் இலக்கை அடைய இன்னும் 1.2 விழுக்காடு மட்டுமே எஞ்சியுள்ளதை இந்த எண்ணிக்கை காட்டுகிறது.
நேற்று வரை நாட்டில் 2 கோடியே 21 லட்சத்து 35 ஆயிரத்து 242 பேர் அல்லது 94.6 விழுக்காட்டினர் குறைந்த பட்சம் ஒரு தடுப்பூசியைப் பெற்றுள்ளதாக சுகாதார அமைச்சின் அதிகாரப்பூர்வ அகப்பக்கமான கோவிட்நாவ் கூறியது.
பெரியவர்களில் 90 விழுக்காட்டினர் தடுப்பூசியை முழுமையாகப் பெறும் பட்சத்தில் மாநில எல்லைகளைக் கடப்பதற்கான அனுமதி வழங்கப்படும் என்று பிரதமர் டத்தோஸ்ரீ இஸ்மாயில் சப்ரி யாக்கோப் கடந்த மாதம் 22 ஆம் தேதி கூறியிருந்தார்.
நாடு முழுவதும் இதுவரை 12 முதல் 17 வயது வரையிலான இளையோரில் 4.1 விழுக்காட்டினர் அல்லது 129,152 பேர் இரண்டு டோஸ் தடுப்பூசியை முழுமையாகப் பெற்றுள்ளனர்.
நேற்று 209,907 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது. அவர்களில் 113,441 பேர் முதலாவது டோஸ் தடுப்பூசியையும் 94,466 பேர் இரண்டாவது டோஸ் தடுப்பூசியையும் பெற்றனர்.
இதன் வழி பிக் எனப்படும் தேசிய கோவிட்-19 தடுப்பூசித் திட்டத்தின் கீழ் இதுவரை 4 கோடியே 50 லட்சத்து 7 ஆயிரத்து 832 தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன.
நேற்று கோவிட்-19 நோய்த் தொற்று தொடர்புடைய இரு மரணச் சம்பவங்கள் பதிவு செய்யப்பட்டன. இந்த எண்ணிக்கையுடன் சேர்த்து அந்நோய்த் தொற்றுக்கு பலியானோரின் எண்ணிக்கை 26,981 ஆக உயர்ந்துள்ளது.


