ஷா ஆலம், அக் 7- யுனிசெல் எனப்படும் சிலாங்கூர் பல்கலைக்கழகத்தில் பயிலும் 8,000 மாணவர்கள் வரும் நவம்பர் மாதம் 17 ஆம் தேதி தொடங்கி வகுப்புகளில் நேரடியாக கல்வியைத் தொடர்வர் என்று அந்த உயர்கல்விக் கூடத்தின் சந்தை மற்றும் மாணவர் நுழைவு அலுவலக இயக்குநர் இணைப் பேராசிரியர் டாக்டர் ஹஷிமா இஸ்மாயில் கூறினார்.
ஷா ஆலம் மற்றும் பிஸ்தாரி ஜெயாவில் நவம்பர் மாதம் கல்வியைத் தொடர்வதற்கு பதிவு செய்து கொண்ட புதிய மாணவர்களும் இதில் அடங்குவர் என்று அவர் தெரிவித்தார்.
வரும் அக்டோபர் மாத இறுதியில் நாடு எண்டமிக் கட்டத்திற்கு மாறும் என கணிக்கப்படும் வேளையில் மாணவர்கள் வழக்கம் போல் வகுப்புகளில் கல்வியைத் தொடர்வதை தடுப்பதற்கு இனி எந்த காரணமும் கிடையாது என்று அவர் சொன்னார்.
புதிய மற்றும் பழைய மாணவர்களை வரவேற்க பல்கலைக்கழக நிர்வாகத்தினர் ஆர்வத்துடன் காத்திருக்கின்றனர். கோவிட்-19 பெருந்தொற்று காலத்தில் இணையம் வாயிலாக கல்வி கற்று சலிப்படைந்து விட்டனர் என்றார் அவர்.
பயிற்சிக்கான பதிவு, தங்குமிடம், அறிமுக வாரம் உள்பட அனைத்து நிகழ்வுகளிலும் எஸ்.ஒ.பி. விதிமுறைகள் முறையாக கடைபிடிப்பதை தாங்கள் உறுதி செய்யவிருப்பதாக அவர் குறிப்பிட்டார்.
பல்கலைக்கழகம் திறக்கப்படும் போது அனைத்து பகுதிகளிலும் கிருமி நாசினி தெளிக்கப்படும் என்பதோடு வகுப்புகள் மற்றும் தங்குமிடங்களில் உஷ்ணத்தை அளவிடும் கருவிகள் வைக்கப்படும் என்றார் அவர்.
மேலும், இன்னும் தடுப்பூசி பெறாத மாணவர்களுக்கு கோவிட்-19 தடுப்பு மருந்து செலுத்தப்படுவதற்கான ஏற்பாடுகள் செய்யப்படும் என்றும் அவர் சொன்னார்.


