கோல சிலாங்கூர், அக் 7- இம்மாத இறுதியில் நாடு எண்டமிக் கட்டத்தில் நுழையும் போது நோய்த் தொற்றைக் கையாள்வதற்கான நடவடிக்கைகளை உள்ளடக்கிய வழிகாட்டியை எஸ்.டி.எப்.சி. எனப்படும் சிலாங்கூர் மாநில கோவிட்-19 சிறப்பு பணிக்குழு வெளியிடும்.
பொது சுகாதாரம் எதிர்நோக்கவுள்ள சவால்கள், நோய்த் தொற்றுக்கு பிந்தைய அம்சங்கள் உள்ளிட்ட விவகாரங்களை இந்த வழிகாட்டி உள்ளடக்கியிருக்கும் என்று அந்த பணிக்குழுவின் தலைவர் டத்தோஸ்ரீ டாக்டர் ஜூல்கிப்ளி அகமது கூறினார்.
இவ்விவகாரம் தொடர்பான பரிந்துரைகளும் கருத்துக்களும் மாநில அரசு மற்றும் சுகாதாரத் துறைக்கான ஆட்சிக்குழு உறுப்பினர் டாக்டர் சித்தி மரியாவிடம் ஒப்படைக்கப்பட்டு விட்டதோடு இதன் தொடர்பில் விரைவில் சந்திப்பும் நடத்தப்படும் என்று அவர் சொன்னார்.
நோய்த் தொற்று பரவும் சமயத்தில் மட்டும் நாம் நடவடிக்கை எடுக்க முடியாது. எதிர்காலத்தில் டெல்டா அல்லது இதர வகை நோய்த் தொற்றுகளின் பரவலை சமாளிப்பதற்கு ஏதுவாக அடிப்படை வசதி, ஆற்றல், பணியாளர்கள் உள்ளிட்ட அனைத்து அம்சங்களிலும் விரிவான தயார் நிலையில் இருப்பது அவசியமாகும் என்றார் அவர்.
நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் அதிக பங்களிப்பை வழங்கும் மாநிலமாக சிலாங்கூர் விளங்குகிறது. ஆகவே, பெருதொற்றை எதிர்கொள்வதற்கான முழு தயார் நிலையில் இம்மாநிலம் இருப்பது அவசியமாகும் என்றார் அவர்.
டீம் சிலாங்கூர் ஏற்பாட்டில் பந்தாய் ரெமிஸ் கடற்கரையில் மேற்கொள்ளப்பட்ட துப்புரவு இயக்கத்தில் கலந்து கொண்டப் பின்னர் செய்தியாளர்களிடம் அவர் இதனைத் தெரிவித்தார்.


