ஷா ஆலம், அக் 7- சிலாங்கூர் அரசின் செல்வேக்ஸ் தடுப்பூசித் திட்டம் 12 முதல் 17 வயது வரையிலான இளையோருக்கும் விரிவுபடுத்தப்படும். இந்நோக்கத்திற்காக 150,000 தடுப்பூசிகள் ஒதுக்கப்பட்டுள்ளதாக மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி கூறினார்.
சுகாதாரத் துறைக்கான மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் டாக்டர் சித்தி மரியா மாமுட் கடந்த செவ்வாய்க் கிழமை தாக்கல் செய்த இளையோருக்கான செல்வேக்ஸ் திட்டம் தொடர்பான பரிந்துரையை சுகாதார அமைச்சு ஏற்றுக் கொண்டுள்ளதாக அவர் சொன்னார்.
இந்த தடுப்பூசித் திட்டத்தில் சிலாங்கூர் அரசினால் நிர்வகிக்கப்படும் சிலாங்கூர் தாபிஸ் ஒருங்கிணைந்த பள்ளி மற்றும் இஸ்லாமிய சமய ஆரம்ப பள்ளி ஆகியவற்றுக்கு முன்னுரிமை அளிக்கப்படும் என்று அவர் தெரிவித்தார்.
அதோடு மட்டுமின்றி மத்திய அரசினால் நடத்தப்படும் தேசிய மாதிரி ஆரம்ப சீன மற்றும் தமிழ்ப்பள்ளிகளுக்கும் தடுப்பூசிகள் வழங்கப்படும் என அவர் குறிப்பிட்டார்.
இந்த தடுப்பூசித் திட்டத்தின் அமலாக்கம் தொடர்பில் மாநில இஸ்லாமிய சமய இலாகா, சிலாங்கூர் மாநில சுகாதார இலாகா ஆகிய தரப்புகளுடன் தாங்கள் ஒத்துழைப்பு நல்கி வருவதாக இங்குள்ள மாநில அரசு தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற செய்தியாளர் கூட்டத்தில் அவர் தெரிவித்தார்.


