கோம்பாக், அக் 3- எதிர்பாராத வகையில் நிகழும் அசம்பாவிதங்களை எதிர்கொள்வதற்காக கோம்பாக் செத்தியா சட்டமன்றத் தொகுதி நிலையில் பேரிடர் பணிப்படை ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது.
சிலாங்கூரில் இத்தகைய பணிப்படையை உருவாக்கும் முதல் சட்டமன்றத் தொகுதியாக கோம்பாக் செத்தியா தொகுதி விளங்குகிறது.
பேரிடர்கள் எந்த நேரத்திலும் எங்கும் நிகழலாம் என்பதால் இத்தகைய பணிப்படையை அமைக்கும் விஷயத்தில் மற்ற தொகுதிகளும் கோம்பாக் செத்தியா தொகுதியை முன்மாதிரியாக கொள்ள வேண்டும் என்று மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி கேட்டுக் கொண்டார்.
தற்போதைய பருவநிலை மாற்றம் காரணமாக எப்போது என்ன நிகழும் என்று யாராலும் அறுதியிட்டுக்கூற முடியாது. ஷா ஆலம் நகரில் கடந்த வாரம் ஏற்பட்ட திடீர் வெள்ளத்தை இதற்கு உதாரணம் காட்டலாம் என்றார் அவர்.
இத்தகைய பணிப்படையை அமைப்பதன் மூலம் நாம் எந்நேரமும் தயார் நிலையில் இருக்க முடியும் என்பதோடு மக்களுக்கும் உடனடியாக உதவ இயலும் என்று அவர் மேலும் சொன்னார்.
இப்பணிப்படையின் நடவடிக்கை அறையை நேற்று தொடக்கி வைத்தப் பின்னர் செய்தியாளர்களிடம் அவர் இதனைத் தெரிவித்தார்.
எழுவர் கொண்ட இந்த பணிப்படை பேரிடர் காலங்களில் தீயணைப்பு வீரர்கள், போலீசார் மற்றும் பொது பாதுகாப்புத் துறை போன்ற அமலாக்கத் துறையினருக்கு உதவிகள் வழங்குவர் எனக் கூறிய அவர், அவசர காலங்களில் பயன்படுத்திக் கூடிய உபகரணங்களையும் இப்படை கொண்டிருக்கும் என்றார்.


