சபாக் பெர்ணம், செப் 8- இரண்டு டோஸ் தடுப்பூசிகளை முழுமையாகப் பெற்று 14 நாட்களைக் கடந்தவர்கள் மட்டுமே காலை மற்றும் இரவுச் சந்தைகளில் அனுமதிக்கப்படுவர் என்று சபாக் பெர்ணம் மாவட்ட மன்றம் கூறியுள்ளது.
இந்த உத்தரவை மீறுவோருக்கு 2,000 வெள்ளி வரை அபராதம் விதிக்கப்படும என்று மாவட்ட மன்றத்தின் தொடர்பு மற்றும் வர்த்தக பிரிவுத் அதிகாரி நோயானி அகமது கூறினார்.
பாசார் பாகி மற்றும் பாசார் மாலாம் செல்வோர் சம்பந்தப்பட்ட மையங்களில் உள்ள பாதுகாவலர்களிடம் இலக்கவியல் தடுப்பூசி சான்றிதழைக் காட்ட வேண்டும். வணிகர்களுக்கும் இந்த நிபந்தனை பொருந்தும் என்று அவர் சொன்னார்.
கோவிட்-19 நோய்த் தொற்றைக் கட்டுப்படுத்துவதற்கும் பொதுமக்கள் தடுப்பூசியைச் பெறுவதை ஊக்குவிப்பதற்கும் இந்நடவடிக்கை பெரிதும் துணை புரியும் என்று அவர் குறிப்பிட்டார்.
இதனிடையே, 18 வயதுக்கும் கீழ்ப்பட்டவர்கள் பாசார் பாகி மற்றும் பாசார் மாலாம் சந்தைகளுக்குச் செல்ல அனுமதிக்கப்படமாட்டார்கள் என்று காஜாங் நகராண்மைக் கழகத்தின் பொது உறவு அதிகாரி கமாருள் இஸ்லான் சுலைமான் கூறினார்.
பதினெட்டு வயதுக்கும் கீழ்ப்பட்டவர்கள் தடுப்பூசியைப் பெறாத காரணத்தால் அவர்களுக்கு நோய்த் தொற்றிலிருந்து பாதுகாப்பு அளிக்கும் நோக்கில் இந்த நிபந்தனை விதிக்கப்படுகிறது என்று அவர் குறிப்பிட்டார்.
காஜாங் வட்டாரத்திலுள்ள 25 காலை மற்றும் இரவுச் சந்தைகள் கடுமையான எஸ்.ஒ.பி. நிபந்தனைகளுடன் கடந்த மாதம் மத்தியிலிருந்து செயல்பட்டு வருவதாக அவர் சொன்னார்.


