சுபாங் ஜெயா, செப் 8- கோவிட்-19 நோய்த் தொற்று ஏற்பட்ட இந்த ஓராண்டு காலத்தில் சிலாங்கூர் மாநிலம் முழுவதும் உள்ள ஊராட்சி மன்றங்கள் வாயிலாக 8,300 தற்காலிக வர்த்தக அனுமதிகள் வழங்கப்பட்டன.
கடந்தாண்டு ஆகஸ்டு தொடங்கி இவ்வாண்டு ஆகஸ்டு வரையிலான ஓராண்டு காலத்தில் இந்த வர்த்தக அனுமதிகள் வழங்கப்பட்டதாக ஊராட்சி மன்றங்களுக்கான ஆட்சிக்குழு உறுப்பினர் இங் ஸீ ஹான் கூறினார்.
நாட்டில் வேலையில்லாதோர் எண்ணிக்கை 750,000 ஆக உயர்ந்துள்ள நிலையில் கோவிட்-19 பெருந்தொற்றின் தாக்கம் காரணமாக மக்கள் எதிர்நோக்கும் பொருளாதாரப் பிரச்னைகளைக் களைவதில் மாநில பரிவுடன் நடந்து கொள்வதை இந்நடவடிக்கை புலப்படுத்துகிறது என்று அவர் சொன்னார்.
இங்குள்ள தாமான் புஞ்சா ஜாலிலில் உள்ள 120 வணிகர்களுக்கு தற்காலிக லைசென்ஸ் வழங்கும் நிகழ்வுக்குப் பின்னர் செய்தியாளர்களிடம் அவர் இதனைத் தெரிவித்தார்.
இந்நிகழ்வில் லைசென்ஸ் பெற்ற வணிகர்கள் இந்த அனுமதியைப் பயன்படுத்தி ஆண்டு இறுதி வரை வியாபாரம் செய்ய முடியும் என அவர் குறிப்பிட்டார்.
அங்காடி வியாபாரிகளுக்கு லைசென்ஸ் கட்டணம் செலுத்துவதிலிருந்து மாநில அரசு விலக்களித்துள்ளது. இதன் மூலம் மாநிலத்திலுள்ள சுமார் 71,800 வணிகர்கள் பயன்பெற்றுள்ளனர் என்று அவர் சொன்னார்.
கடந்த 2016 ஆம் ஆண்டு முதல் மாநில அரசு இத்திட்டத்தை அமல்படுத்தி வருகிறது. கடந்த ஐந்தாண்டுகளில் இத்திட்டத்திற்கான நிதிச் செலவினத்தின் மதிப்பு 5 கோடியே 40 லட்சம் வெள்ளியாகும் என்றார் அவர்.


