ஷா ஆலம், செப் 6- பொதுமக்கள் நகராண்மைக்கழகத்துடனான பணிகளை எளிதாக மேற்கொள்வதற்கு ஏதுவாக மக்கள் பரிவு விவேக கட்டண முறையை கோல சிலாங்கூர் நகராண்மைக் கழகம் அறிமுகப்படுத்தியுள்ளது.
ஐ.பி.3கே.எஸ். எனப்படும் இந்த முறையின் கீழ் பொதுமக்கள் சேவைகளுக்கான கட்டணங்களை சரிபார்ப்பது மற்றும் செலுத்துவது போன்ற பணிகளை இயங்கலை வாயிலாக மேற்கொள்ள முடியும் என்று நகராண்மைக் கழகத் தலைவர் ரஹிலா ரஹ்மாட் கூறினார்.
இதன் வழி மதிப்பீட்டு வரி மற்றும் அபராதம் செலுத்துவது, மண்டபங்களுக்கு முன்பு பதிவு செய்வது, லைசென்ஸ் பெற விண்ணப்பம் செய்வது அல்லது புதுப்பிப்பது, டெண்டர் பாரங்களை வாங்குவது போன்ற பணிகளை இணையம் மூலம் மேற்கொள்வதற்குரிய வாய்ப்பு பொதுமக்களுக்கு கிட்டும் என்று அவர் சொன்னார்.
சிலாங்கூர் அரசின் இலக்கவியல்மயத் திட்டத்திற்கு ஏற்ப அரசு சார்பு அமைப்பான கோல சிலாங்கூர் நகராண்மைக்கழகமும் மக்களுக்கு நட்புறவான மற்றும் எளிதான வகையில் சேவையாற்றுவதற்காக இலக்கவியலை ஒரு தளமாக கொண்டு செயல்படவுள்ளது என அவர் குறிப்பிட்டார்.
சிலாங்கூர் கிகாபைட் ஒருங்கமைப்பின் வாயிலாக ஒரு விநாடிக்கு ஒரு கிகாபைட் இணையத் தரவை வழங்கக்கூடிய அதிவேக இணைய சேவையை நகராண்மைக்கழகம் பயன்படுத்துவதாகவும் அவர் கூறினார்.


