ஷா ஆலம், செப் 5- நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை காரணமாக பாதிக்கப்பட்ட வணிகர்களுக்கு உதவும் வகையில் பல்வேறு திட்டங்களை கோல சிலாங்கூர் நகராண்மைக் கழகம் அமல் படுத்தியுள்ளது.
நகராண்மைக் கழகத்திற்கு சொந்தமான கடைகளில் வியாபாரம் செய்வோருக்கு 40 விழுக்காட்டு வாடகைக் கழிவு வழங்குவதும் அதில் அடங்கும். எனினும், வாடகை பாக்கி வைத்திராதவர்களுக்கு மட்டுமே இந்த சலுகை வழங்கப்படும்.
இதுதவிர, பாசார் பாகி மற்றும் பாசார் மாலாம் வியாபார இடங்களுக்கான வாடகையும் 25 விழுக்காடு குறைக்கப்படுகிறது. இந்த சலுகைகள் இவ்வாண்டு இறுதி வரை அமலில் இருக்கும்.
மேலும் பட்டறை, வாகன உபரிபாக விற்பனை மற்றும் கார் கழுவும் மையங்களை நடத்துவோருக்கு கார் நிறுத்துமிடக் கட்டணத்தை இரு தவணைகளாக வழங்கவும் அனுமதிக்கப்படுகிறது என்று கோல சிலாங்கூர் நகராண்மைக் கழகத் தலைவர் ரஹிலா ரஹ்மாட் கூறினார்.
நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை காலத்தில் செயல்படுவதற்கு அனுமதிக்கப்படாத வணிக மையங்களுக்கு வாடகை விலக்களிப்பு வழங்கப்படுவதோடு உணவு வியாபாரம் மற்றும் உணவுத் தயாரிப்பு துறையில் உள்ளவர்களுக்கு 30 வாடகைக் கழிவு தரப்படுகிறது என்று அவர் தெரிவித்தார்.
வாடகையை தாமதமாக செலுத்துவோருக்கு அபராதத் தொகையை செலுத்துவதிலிருந்து விலக்களிக்கப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டார்.


