கூச்சிங், செப் 5- கோவிட்-19 சுய பரிசோதனை கருவிக்கான உச்ச வரம்பு விலையை பின்பற்ற வணிகர்களுக்கு இன்று தொடங்கி ஒரு வார கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.
அந்த ஆண்டிஜென் விரைவு சோதனைக் கருவிகளை அதிகப்பட்சம் வெ.19.90 என்ற விலையில் மட்டுமே விற்க வேண்டும் என நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக உள்நாட்டு வாணிக மற்றும் பயனீட்டாளர் விவகாரத் துறை அமைச்சர் டத்தோஸ்ரீ அலெக்சாண்டர் நந்தா லிங்கி கூறினார்.
இதன் தொடர்பில் அமைச்சின் அமலாக்க அதிகாரிகள் சோதனைகளை மேற்கொள்வர். விலைக்கட்டுப்பாட்டை மீறுவோர் மீது தற்போதைக்கு நடவடிக்கை எடுக்கப்படாது, மாறாக, நிர்ணயிக்கப்பட்ட விலையில் அந்த பரிசோதனை கருவிகளை விற்கும்படி அவர்களுக்கு அறிவுறுத்தப்படும் என்றார் அவர்.
அந்த சோதனைக் கருவிகளுக்கான விலையில் உரிய மாற்றங்களைச் செய்வதற்கு ஏதுவாக வணிகர்களுக்கு ஒரு வார கால அவகாசம் வழங்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.
அதே சமயம், அந்த கருவியின் மொத்த விலை வெ.16.00 ஆக இருப்பதை உறுதி செய்வதற்காக மொத்த வியாபாரிகளிடமும் சோதனை மேற்கொள்ளப்படும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
அந்த கோவிட்-19 சோதனை கருவியின் விலையை உயர்த்தும் வணிகர்கள் மற்றும் மொத்த வியாபாரிகளுக்கு எதிராக 2011 ஆம் ஆண்டு விலைக்கட்டுப்பாட்டு மற்றும் கொள்ளை லாப தடைச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் எச்சரித்தார்.


