ஷா ஆலம், செப் 4- செல்வேக்ஸ் எனப்படும் சிலாங்கூர் மாநில அரசின் தடுப்பூசித் திட்டத்தின் வழி இதுவரை 480,000 தடுப்பூசிகள் பொதுமக்களுக்கு செலுத்தப்பட்டுள்ளன.
ஹெல்த்கேர் நிறுவனத்தின் ஏற்பாட்டிலான தடுப்பூசி மையங்கள் வாயிலாக கடந்த ஜூன் மாதம் 26 ஆம் தேதி முதல் இந்த செல்வேக்ஸ் தடுப்பூசி இயக்கம் மேற்கொள்ளப்பட்டதாக அந்நிறுவனத்தின் தலைமை செயல்முறை அதிகாரி துங்கு லெஸ்தா துங்கு அலாவுடின் கூறினார்.
இந்த தடுப்பூசித் திட்டத்தின் கீழ் 252,000 பேர் முதலாவது தடுப்பூசியையும் 228,000 பேர் இரண்டாவது தடுப்பூசியையும் பெற்றுள்ளதாக கூறிய அவர், நோய்த் தடுப்பாற்றலை சமூகத்தில் ஏற்படுத்துவதில் இத்திட்டம் வெற்றிகரமான பலனைத் தந்துள்ளதாக வர்ணித்தார்.
இந்த திட்டம் சிறப்பான அடைவு நிலையைப் பதிவு செய்துள்ளது. மாநில மக்கள் அனைவரும் தடுப்பூசியைப் பெற்றிருப்பதை உறுதி செய்யும் அரசாங்கத்தின் முயற்சிக்கு எங்களால் இயன்ற பங்களிப்பை வழங்கியுள்ளோம் என்றார் அவர்.
இதனைத் தொடர்ந்து பெரிய அளவிலான தடுப்பூசி மையங்களை மூடுவதற்கு நாங்கள் முடிவெடுத்துள்ளோம். அடுத்தக் கட்டமாக கிள்ளான் பள்ளத்தாக்கிலுள்ள செல்கேர் கிளினிக்குகளில் தடுப்பூசி செலுத்தும் பணி மேற்கொள்ளப்படும் என்று அவர் குறிப்பிட்டார்.
இதனிடையே, தடுப்பூசி மையங்களுக்குச் செல்வதற்கான வசதி இல்லாத புறநகர்ப் பகுதி மக்களை இலக்காக கொண்டு நடமாடும் தடுப்பூசித் திட்டத்தை வரும் திங்கள்கிழமை தொடங்கி தாங்கள் மேற்கொள்ளவுள்ளதாகவும் அவர் கூறினார்.
தடுப்பூசி மையமாக மாற்றப்பட்ட பேருந்து மூலம் சம்பந்தப்பட்ட பகுதிகளுக்குச் சென்று தடுப்பூசி செலுத்தும் பணி திங்கள் தொடங்கி மேற்கொள்ளப்படும் என்றார் அவர்.


