ஷா ஆலம், செப் 4- சந்தையில் விற்கப்படுவதை விட குறைவான விலையில் கோவிட்-19 சுய பரிசோதனைக் கருவிகளை பொதுமக்கள் பெறுவதை உறுதி செய்வதற்கான முயற்சியில் சிலாங்கூர் அரசு ஈடுபட்டுள்ளது.
செல்கேர் நிறுவனத்தின் ஒத்துழைப்புடன் சட்டமன்ற உறுப்பினர்களின் தொகுதி சேவை மையங்கள் வாயிலாக விநியோகிக்கப்படும் இக்கருவிகளை பொது மக்கள் வாங்கிக் கொள்ளலாம் என்று சுகாதாரத் துறைக்கான மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் டாக்டர் சித்தி மரியா மாமுட் கூறினார்.
பொதுமக்களுக்கு இக்கருவிகள் தேவைப்படும் பட்சத்தில் தொகுதி சேவை மையங்களில் வாங்கிக் கொள்ளலாம். அந்த கருவிகளை கொள்முதல் விலையிலே செல்கேர் எங்களுக்கு வழங்குகிறது என்று அவர் தெரிவித்தார்.
ஆகவே இந்த கருவிகள் மருந்தகங்களில் விற்பதைக் காட்டிலும் குறைந்த விலையில் கிடைக்கும். மருந்தகங்களுடன் போட்டியிடுவது எங்கள் நோக்கமல்ல. பொதுமக்களுக்கு குறைவான விலையில் இக்கருவிகள் கிடைப்பதை உறுதி செய்யவே நாங்கள் விரும்புகிறோம் என்றார் அவர்.
பண்டார் உத்தாமா தொகுதி சேவை மையத்தில் நேற்று நடைபெற்ற ஐந்து சட்டமன்றத் தொகுதிகளுக்கு கோவிட்-19 சுயபரிசோதனைக் கருவிகளைப் பகிர்ந்தளிக்கும் நிகழ்வுக்கு பின்னர் செய்தியாளர்களிடம் அவர் இதனைத் தெரிவித்தார்.
கோவிட்-19 பரிசோதனைக் கருவிகளுக்கு உச்ச வரம்பு விலையை நிர்ணயிக்கும் மத்திய அரசாங்கத்தின் முடிவை தாம் வரவேற்பதாகவும் சித்தி மரியா கூறினார்.
இதற்கு முன்னர் ஆர்.டி.கே. மற்றும் பி.சி.ஆர். கருவிகளுக்கு உச்ச வரம்பு விலை நிர்ணயிக்கப்படாமலிருந்ததை சுட்டிக்காட்டிய அவர், அரசாங்கத்தின் இந்நடவடிக்கை வரவேற்கத்தக்க ஒன்றாகும் என்றார்.


