பெட்டாலிங் ஜெயா, செப் 4- நடமாடும் தடுப்பூசியை சேவையை பண்டார் உத்தாமா தொகுதி தொடக்கியுள்ளது. முதல் கட்டமாக கம்போங் சுங்கை காயு ஆரா பகுதியில் இன்று இவ்வியக்கம் மேற்கொள்ளப்படும்.
இரண்டு நாட்களுக்கு மேற்கொள்ளப்படும் இந்த நடமாடும் தடுப்பூசி இயக்கத்தின் வாயிலாக சுமார் 1,000 பேருக்கு குறிப்பாக அந்நிய நாட்டினருக்கு தடுப்பூசி செலுத்த தாங்கள் திட்டமிட்டுள்ளதாக தொகுதி சட்டமன்ற உறுப்பினர் ஜமாலியா ஜமாலுடின் கூறினார்.
இந்த நடமாடும் தடுப்பூசியை சேவை காலை மணி 9.00 முதல் மாலை மணி 4.00 வரை கம்போங் சுங்கை காயு ஆரா ஆரம்ப சமயப் பள்ளியில் நடைபெறும் என்று அவர் சொன்னார்.
வருகைக்கான முன்பதிவு செய்தவர்கள் குறிப்பிட்ட நேரத்தில் உரிய ஆவணங்களுடன் தடுப்பூசி மையத்திற்கு வந்து விடும்படி அவர் கேட்டுக் கொண்டார்.
பண்டார் உத்தாமா தொகுதியைச் சேர்ந்தவர்களில் பெரும்பாலோர் குறிப்பாக உள்நாட்டினர் இரண்டு தடுப்பூசிகளை முழுமையாகப் பெற்று விட்டதாக அவர் குறிப்பிட்டார்.
மாநில அரசு இம்மாதம் தொடங்கி நடமாடும் தடுப்பூசி இயக்கத்தை மேற்கொள்ளவுள்ளதாக சுகாதாரத் துறைக்கான ஆட்சிக்குழு உறுப்பினர் டாக்டர் சித்தி மரியா மாமுட் கடந்த மாதம் 24 ஆம் தேதி கூறியிருந்தார்.


