ஷா ஆலம், செப் 4- கோவிட்-19 பெருந்தொற்று காரணமாக பாதிக்கப்பட்ட இந்திய சமூகத்தைச் சேர்ந்த சுமார் 15,000 குடும்பங்களுக்கு உணவுக் கூடைகள் வழங்கப்பட்டன.
நோய்த் தொற்று பரவலால் வசதி குறைந்த குடும்பத்தினர் உணவு பற்றாக்குறை பிரச்னையை எதிர்நோக்கமாலிருப்பதை உறுதி செய்வதற்காக உணவுக் கூடைத் திட்டம் மேற்கொள்ளப்பட்டதாக சிலாங்கூர் மாநில ஆட்சிக் குழு உறுப்பினர் வீ.கணபதிராவ் கூறினார்.
நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை காரணமாக இவ்வாண்டில் ஆலயங்களில் மேம்பாட்டுப் பணிகள் மேற்கொள்ளப்படாததால் அந்த வழிபாட்டுத் தலங்களுக்காக ஒதுக்கப்பட்ட மானியத்திலிருந்து ஒரு பகுதி இந்த உணவுக் கூடைத் திட்டத்திற்கு பயன்படுத்தப்பட்டதாக அவர் சொன்னார்.
நம்மிடம் பிரத்தியேக மானியம் எதுவும் கிடையாது. ஆகவே, ஆலயங்களுக்காக ஒதுக்கப்பட்ட மானியத்திலிருந்து ஒரு பகுதியை உணவுக் கூடைத் திட்டத்திற்கு பயன்படுத்தினோம். குறைந்த வருமானம் பெறும் பி40 பிரிவினரை இலக்காக கொண்டு இந்த உணவுக் கூடைத் திட்டம் அமல் செய்யப்பட்டது என்றார் அவர்.
இதுதவிர ஆலயங்கள் வாயிலாகவும் சுற்றுவட்டார மக்களுக்கு உணவுப் பொருள் விநியோகிக்கப்பட்டதாக லீமாஸ் எனப்படும் பௌத்த, கிறிஸ்துவ, இந்து, சீக்கிய, மற்றும் தோ சமயங்களின் சிறப்பு செயல்குழுவின் இணைத் தலைவருமான அவர் குறிப்பிட்டார்.
மேலும் ஆலயங்கள் வாயிலாக மேற்கொள்ளப்பட்ட உணவு வங்கித் திட்டத்தின் கீழ் இன சமய வேறுபாட்டின்றி உள்நாட்டினர், வெளிநாட்டினர் அனைவருக்கு உதவி வழங்கப்பட்டது என்றும் அவர் சொன்னார்.


