கோலாலம்பூர், செப் 4- வரும் அக்டோபர் மாதத்தில் அனைத்து உயர்கல்விக் கூடங்களையும் மீண்டும் திறப்பதற்கு உயர்கல்வி அமைச்சு திட்டமிட்டுள்ளது.
தேசிய மீட்சித் திட்டத்தின் அனைத்து கட்டங்களிலும் 2021/2022 கல்வி தவணைக்கான மாணவர் சேர்ப்பு நடவடிக்கையை சம்பந்தப்பட்ட மாணவர்களின் நேரடி பங்கேற்பின் வழி மேற்கொள்ளத் திட்டமிடப்பட்டுள்ளதாக உயர்கல்வி அமைச்சர் டத்தோஸ்ரீ டாக்டர் நோராய்னி அகமது கூறினார்.
உயர்கல்விக் கூடங்களுக்கான மீட்சித் திட்டத்தின் கீழ் இந்நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாக கூறிய அவர், தடுப்பூசியை முழுமையாகப் பெற்ற மாணவர்கள் மீண்டும் கல்வியைத் தொடர்வதை உறுதி செய்யும் அமைச்சின் இலக்கிற்கேற்ப இது அமைவதாக சொன்னார்.
உயர் கல்விக் கூடங்களை மீண்டும் திறக்கும் திட்டத்திற்கு நேற்று கூடிய தேசிய பாதுகாப்பு மன்றம் ஒப்புதல் அளித்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
இத்திட்டம் சீராக நடைபெறுவதை உறுதி செய்வதற்காக தடுப்பூசி இயக்கத்தில் உயர்கல்விக் கூட மாணவர்கள் மற்றும் பணியாளர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும் என்று சுகாதார அமைச்சர் கைரி ஜமாலுடினை தாம் கேட்டுக் கொண்டுள்ளதாகவும் அவர் கூறினார்.
இன்னும் தடுப்பூசி பெறாத 648,000 மாணவர்களுக்கு 12 லட்சத்து 96 ஆயிரம் தடுப்பூசிகள் தேவைப்படுகிறது. மாணவர்களும் பணியாளர்களும் விரைந்து தடுப்பூசி பெறுவதற்கு ஏதுவாக உயர்கல்விக் கூடங்களை தடுப்பூசி மையங்களாக பயன்படுத்துவது தொடர்பான பரிந்துரையை தாங்கள் முன்வைத்துள்ளதாக அவர் தெரிவித்தார்.


