ஷா ஆலம், செப் 4- சுங்கை செமினி நீர் சுத்திகரிப்பு நிலையத்தை உடனடியாக மூடுவதற்கு ஆயர் சிலாங்கூர் நிறுவனம் மேற்கொண்ட நடவடிக்கை காரணமாக சுத்திகரிக்கப்பட்ட நீர் மாசுபடும் அபாயம் தவிர்க்கப்பட்டது.
ஆயர் சிலாங்கூர் நிறுவனம் மேற்கொண்ட இந்த கூட்டு நடவடிக்கையின் வாயிலாக நீர் தூய்மைக்கேட்டுப் பிரச்னைக்கு 12 மணிக்கும் குறைவான நேரத்தில் தீர்வு காணப்பட்டதாக மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி கூறினார்.
சுங்கை செமினி நீர் சுத்திகரிப்பு மையம் மீண்டும் செயல்படத் தொடங்கிவிட்டது. பாதிக்கப்பட்ட பகுதிகளில் நீர் விநியாகம் கட்டங் கட்டமாக வழக்க நிலைக்கு திரும்பும் என்றார் அவர்.
சுங்கை செமினி ஆற்று நீரில் துர்நாற்றம் கலந்தது நேற்று மாலை கண்டு பிடிக்கப்பட்டதை தொடர்ந்து சுங்கை செமினி நீர் சுத்திகரிப்பு நிலையத்தில் பணிகள் நிறுத்தப்பட்டன.
இதனால் ஐந்து மாவட்டங்களில் உள்ள 463 பகுதிகளில் நீர் விநியோகத் தடை ஏற்பட்டது. பெட்டாலிங் மாவட்டத்தில் 172 இடங்களும் உலு லங்காட்டில் 54 பகுதிகளும் சிப்பாங்கில் 194 பகுதிகளும் புத்ரா ஜெயாவில் 23 பகுதிகளும் கோல லங்காட்டில் 20 இடங்களும் நீர் விநியோகத் தடையை எதிர்நோக்கின.


