கோலாலம்பூர், செப் 3- நாட்டில் நேற்று கோவிட்-19 நோய்த் தொற்று காரணமாக பாதிக்கப்பட்ட 20,988 பேரில் 73.6 விழுக்காட்டினர் அல்லது 14,855 பேர் முதலாவது அல்லது இரண்டாவது தடுப்பூசியைப் பெறாதவர்களாவர்.
நோய் நோய்த் தொற்று அடையாளம் காணப்பட்டவர்களில் 9,860 பேர் தடுப்பூசியை அறவே பெறாதவர்கள் என்று சுகாதாரத் துறை தலைமை இயக்குநர் டான்ஸ்ரீ டாக்டர் நோர் ஹிஷாம் அப்துல்லா கூறினார்.
அவர்களில 4,995 பேர் முதலாவது தடுப்பூசியப் பெற்றுள்ள வேளையில் 6,133 பேர் இரண்டு தடுப்பூசிகளை முழுமையாகப் பெற்றவர்கள் என்று அவர் குறிப்பிட்டார்.
நோய்த் தொற்றுக்கான லேசான அறிகுறிகளை (இரண்டாம் கட்ட நோயாளிகள்) 10,979 பேர் கொண்டிருந்த வேளையில் 9,668 பேர் நோய்த் தொற்றுக்கான எந்த அறிகுறியையும் (முதல் கட்டம்) கொண்டிருக்கவில்லை என்றார் அவர்.
மூன்றாம் கட்டத்தில் (நுரையீரல் அழற்சி) 171 பேரும் நான்காம் கட்டத்தில் (ஆக்சிஜன் உதவி தேவைப்படுவோர்) 63 பேரும் ஐந்தாம் கட்டத்தில் (ஆபத்தான நிலை) 107 பேரும் உள்ளனர் என்று அவர் மேலும் தெரிவித்தார்.
நேற்று கோவிட்-19 நோய்த் தொற்றுக்கு பலியானவர்களின் எண்ணிக்கை 249 ஆகும். அவர்களில் 184 பேர் கடும் நோயினால் பாதிக்கப்பட்ட வேளையில் 80 பேர் மருத்துவமனைக்கு வெளியே மரணமடைந்தனர்.


