ஷா ஆலம், செப் 1- சிலாங்கூர் மாநில அரசின் ஏற்பாட்டில் இலவசமாக நடத்தப்படும் குழந்தை பராமரிப்பு பயிற்சியில் பங்கேற்க 18 வயதுக்கும் மேற்பட்ட பெண்கள் அழைக்கப்படுகிறார்கள்.
இத்திட்டத்திற்கு தேர்ந்தெடுக்கப்படும் பெண்களுக்கு இம்மாதம் 24 ஆம் தேதி முதல் 26 ஆம் தேதி வரை இயங்கலை வாயிலாக நடைபெறும் தீவிர சிறார் மேம்பாட்டு பயிற்சியில் பங்கேற்க வாய்ப்பு வழங்கப்படும் என்று யாவாஸ் அறவாரியம் கூறியது.
இந்த பயிற்சியில் பங்கேற்போருக்கு 50 வெள்ளி மதிப்பிலான இலவச இணைய தரவு சலுகையும் வழங்கப்படும் என்று அவ்வாரியம் மேலும் தெரிவித்தது.
கடந்த மாதம் 27 ஆம் தேதி தொடங்கி இம்மாதம் 12 ஆம் தேதி வரை இந்த பயிற்சிக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. https://e-kipk.yawas.my/permohonan/ என்ற அகப்பக்கம் வாயிலாக இந்த பயிற்சித் திட்டத்திற்கு விண்ணப்பிக்கலாம்.
சிலாங்கூர் மாநிலத்திலுள்ள பெண்கள் குழந்தை பராமரிப்பு துறையில் தேர்ச்சி பெறுவதை உறுதி செய்வதற்காக மாநில அரசு கடந்த 2013ஆம் ஆண்டில் இந்த பயிற்சித் திட்டத்தை அறிமுகம் செய்தது.
கடந்த ஒன்பது ஆண்டுகளில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பெண்கள் இந்த குழந்தை பராமரிப்பு பயிற்சியில் பங்கு கொண்டு பலனடைந்துள்ளனர்.


