ஷா ஆலம், செப் 1- கடந்தாண்டு டிசம்பர் மாதம் முதல் பண்டான் இண்டா தொகுதியைச் சேர்ந்த சுமார் 8,000 பேருக்கு உணவுக் கூடைகள் வழங்கப்பட்டன. கோவிட்-19 நோய்த் தொற்று மற்றும் நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை காரணமாக பாதிக்கப்பட்டவர்களுக்கு இந்த உணவுப் பொருள்கள் விநியோகிக்கப்பட்டன.
தொகுதி சேவை மையத்தின் வாயிலாக மாதந்தோறும் சுமார் ஐம்பது வெள்ளி மதிப்பிலான 1,000 உணவுக் கூடைகள் பொதுமக்களுக்கு வழங்கப்படுவதாக தொகுதி சட்டமன்ற உறுப்பினர் இஞ்சினியர் இஷாம் ஹஷிம் கூறினார்.
பொது மக்களுக்கு அதிக உதவிகளை வழங்கிய தொகுதிகளில் பண்டான் இண்டா தொகுதியும் ஒன்றாகும். மாநில அரசு தவிர்த்து தனியார் துறையிடமிருந்தும் நாங்கள் உதவிகளைப் பெற்றோம். இதன் மூலம் மாதம் 50,000 வெள்ளி செலவில் 1,000 உணவுக் கூடைகளை விநியோகிக்க முடிந்தது என்றார் அவர்.
பெருந்தொற்றால் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் உதவிகள் சென்று சேர வேண்டும் என்ற நோக்கத்தின் அடிப்படையில் தொகுதிக்கு வெளியில் உள்ளவர்களுக்கும் உதவிப் பொருள்கள் வழங்கப்பட்டன என்று அவர் சொன்னார்.
இது தவிர, வீட்டிலிருந்து கற்றல், கற்பித்தல் நடவடிக்கைகளில் பங்கு கொள்ளும் மாணவர்களுக்கு உதவும் பொருட்டு 500 கையடக்க கணினிகளும் 200 மடிக்கணினிகளும் விநியோகிக்கப்பட்டன என்றும் அவர் தெரிவித்தார்.


