ஷா ஆலம், செப் 30- சுங்கை காண்டீஸ் தொகுதியில் உள்ள 16 மற்றும் 17 வயதுடைய சுமார் 6,000 இளையோர் முதலாவது டோஸ் கோவிட்-19 தடுப்பூசியைப் பெற்றனர்.
ஹிஷாமுடின் சமய உயர்நிலைப் பள்ளியில் கடந்த வாரம் தொடங்கி ஆறு நாட்களாக நடைபெற்ற தடுப்பூசி இயக்கத்தில் இந்த எண்ணிக்கை பதிவு செய்யப்பட்டதாக தொகுதி சட்டமன்ற உறுப்பினர் முகமது ஜவாவி அகமது முக்னி கூறினார்.
ஒவ்வொரு நாளும் சராசரி 1,000 மாணவர்கள் தடுப்பூசி பெற்றனர். இறுதி நாளான இன்றைய தினமும் அதே எண்ணிக்கையிலான மாணவர்கள் தடுப்பூசி பெறுவர் என எதிர்பார்க்கிறோம் என்றார் அவர்.
தடுப்பூசி பெறுவதற்கு அந்த மையத்திற்கு வந்த மாணவர்களுக்கு சுக்கா எனப்படும் சிலாங்கூர் சமூக சுகாதார தன்னார்வலர் அமைப்பின் ஒத்துழைப்புடன் ஆயிரம் உணவுப் பொட்டலங்களை விநியோகித்தப் பின்னர் செய்தியாளர்களிடம் அவர் இதனைத் தெரிவித்தார்.
பிக் ரொமாஜா எனும் இளையோருக்கான தேசிய கோவிட்-19 தடுப்பூசித் திட்டத்திற்காக சிலாங்கூரில் 399 பள்ளிகள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதாக சிலாங்கூர் மாநில சுகாதார இயக்குநர் டத்தோ டாக்டர் ஷஹாரி நாடிமான் கடந்த 23 ஆம் தேதி கூறியிருந்தார்.


