ஷா ஆலம், செப் 24- சிலாங்கூர் மாநிலத்தில் பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியை காக்கும் கடப்பாட்டை மாநில அரசு கொண்டுள்ளதாக சுற்றுச்சூழல் துறைக்கான ஆட்சிக்குழு உறுப்பினர் இங் ஸீ ஹான் உறுதியளித்துள்ளார்.
ஷா ஆலம் அருகிலுள்ள புக்கிட் செராக்காவில் மேம்பாட்டுப் பணிகள் மேற்கொள்ளப்படும் பகுதி பாதுகாக்கப்பட்ட வனப்பகுதி அல்ல என்று அவர் விளக்கினார்.
புக்கிட் செராக்கா பாதுகாக்கப்பட்ட வனப்பகுதி மற்றும் புக்கிட் செராக்கா தம்பாஹான் பாதுகாக்கப்பட்ட வனப்பகுதிக்கு அருகில் இந்த மேம்பாட்டுப் பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன என்றும் அவர் கூறினார்.
புக்கிட் செராக்கா பாதுகாக்கப்பட்ட வனப்பகுதி மற்றும் ஷா ஆலம் சமூக வனப்பகுதி அருகே மேற்கொள்ளப்படும் மேம்பாட்டுத் திட்டம் தொடர்பில் அரச சாரா அமைப்புகளும் பொதுமக்களும் சமூக ஊடகங்களில் பல்வேறு கருத்துகளை வெளியிட்டு வருவது தொடர்பில் அவர் இவ்வாறு கருத்துரைததார்.
சாலை நிர்மாணிப்புக்கும் வீடமைப்புத் திட்டங்களை மேற்கொள்வதற்கும் அழிக்கப்பட்டு வரும் வனப்பகுதி பாதுகாக்கப்பட்ட வனப்பகுதிக்கு அப்பால் உள்ளது. இப்பகுதிக்கான பாதுகாக்கப்பட்ட வன அந்தஸ்து முந்தைய பாரிசான் அரசாங்கத்தால் மீட்டுக் கொள்ளப்பட்டது என்றார் அவர்.
நில உரிமை நோக்கத்திற்காக இப்பகுதியின் பாதுகாக்கப்பட்ட வன அந்தஸ்து கடந்த 2006 ஆம் ஆண்டு ரத்து செய்யப்பட்டது. அந்த பகுதி இனியும் பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியாக இல்லாததால் அதன் மேம்பாட்டுத் திட்டங்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கும் அதிகாரம் சிலாங்கூர் மாநில வன இலாகாவுக்கு இல்லை என்றும் அவர் தெளிவுபடுத்தினார்.
23,826 ஏக்கர் நிலப்பரப்பை உள்ளடக்கிய புக்கிட் செராக்கா நிலப்பகுதி கடந்த 1909 ஆம் ஆண்டு பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியாக பிரகடனப்படுத்தப்பட்டது. பண்டார் புஞ்சா ஆலம், ஆலம் புடிமான், யு.ஐ.டி.எம். புஞ்சா ஆலம் உள்ளிட்ட திட்டங்களுக்காக பல்வேறு கட்டங்களில் அப்பகுதியின் நில அந்தஸ்து மீட்டுக் கொள்ளப்பட்டது.
தற்போது புக்கிட் செராக்காவில் எஞ்சியிருக்கும 3,208 ஏக்கர் பகுதியை பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியாக மாநில வன இலாகா அறிவித்து பாதுகாத்து வருகிறது என்றார் அவர்.


