சிப்பாங், செப் 24- சிலாங்கூர் அரசின் செல்வேக்ஸ் கம்யூனிட்டி மற்றும் நடமாடும் தடுப்பூசித் திட்டத்தின் கீழ் டிங்கில் தொகுதியைச் சேர்ந்த இரண்டாயிரத்திற்கும் மேற்பட்டோர் கோவிட்-19 தடுப்பூசியைப் பெற்றனர்.
தடுப்பூசி செலுத்தும் மையம் கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த இடத்தில் அமைந்தது மற்றும் எளிதான பதிவு முறை ஆகிய காரணங்களால் பொதுமக்கள் தடுப்பூசி பெறுவதை எளிதானது என்று தொகுதி ஒருங்கிணைப்பாளர் ஹமிடி எ ஹசான் கூறினார்.
புதிதாக 18 வயது நிரம்பியவர்கள், ஆவணம் இல்லாத அந்நிய நாட்டினர் தடுப்பூசி பெறுவதற்கு இந்த செல்வேக்ஸ் தடுப்பூசித் திட்டம் பெரிதும் துணை புரிந்தது என்று அவர் தெரிவித்தார்.
கடுமையான விளைவுகளை ஏற்படுத்தக்கூடிய டெல்டா போன்ற ஆபத்தான நோய்த் தொற்றுகளிலிருந்து பாதுகாத்துக் கொள்வதற்கு ஏதுவாக பொதுமக்கள் அனைவரும் தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும் என்றும் அவர் வலியுறுதினார்.
பொதுமக்களில் சிலர் குறிப்பாக ஆவணங்கள் இல்லாத அந்நிய நாட்டினர் மத்திய அரசின் தடுப்பூசித் திட்டத்தில் தடுப்பூசி பெறுவதற்கான வாய்ப்பை பெற முடியாது போயிருக்கலாம். அத்தகைய தரப்பினர் தடுப்பூசி பெறுவதற்கு இந்த செல்வேக்ஸ் திட்டம் துணை புரியும் என்றார் அவர்.
டிங்கில் பொது மார்க்கெட் பகுதியில் இன்று நடைபெற்ற நடமாடும் செல்வேக்ஸ் தடுப்பூசித் திட்டத்தை பார்வையிட்டப் பின்னர் செய்தியாளர்களிடம் அவர் இதனைக் கூறினார்.


