ஷா ஆலம், செப் 24- சிலாங்கூர் அரசின் செல்வேக்ஸ் நடமாடும் தடுப்பூசி இயக்கம் நாளை பண்டார் உத்தாமா மற்றும் டாமன்சாரா டாமாய் தொகுதிகளில் நடைபெறும்.
டாமன்சாரா டாமாய் சமூக மண்டபத்திலும் பண்டார் உத்தாமா, கம்போங் செம்பாக்கா கூடைப்பந்து திடலிலும் நாளை காலை 9.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை இந்த தடுப்பூசி இயக்கம் நடைபெற ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
மாநிலத்திலுள்ள யாரும் தடுப்பூசி பெறுவதிலிருந்து விடுபடாமலிருப்பதை உறுதி செய்யும் நோக்கில் நடத்தப்படும் இந்த தடுப்பூசி இயக்கத்தில் 18 வயதுக்கும் மேற்பட்ட மலேசிய பிரஜைகளும் அந்நிய நாட்டினரும் பங்கேற்கலாம்.
இந்த தடுப்பூசி திட்டத்தில் பங்கு கொள்ள விரும்புவோர் செலங்கா செயலி வாயிலாக முன்பதிவு செய்து கொள்ள வேண்டும் என்பதோடு சரியான பற்றுச் சீட்டு குறியீட்டையும் உள்ளிட வேண்டும்.
டாமான்சாரா டாமாய் தொகுதியில் நடைபெறும் நடமாடும் தடுப்பூசி இயக்கத்திற்கு DBL25SEP என்ற குறியீடும் பண்டார் உத்தாமா தொகுதிக்கு DBU25SEP என்ற குறியீடும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
மாநிலத்திலுள்ள 11 தொகுதிகளை இலக்காக கொண்ட இந்த நடமாடும் தடுப்பூசி இயக்கம் இம்மாதம் 12 ஆம் தேதி முதல் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.


