புத்ரா ஜெயா, செப் 23- பள்ளித் தவணை தொடங்கி வகுப்புகள் முழுமையாக செயல்படும் போது கோவிட்-19 தடுப்பூசியை பெற்றிராத மாணவர்கள் பள்ளி வருவதை கல்வியமைச்சு தடுக்காது.
மாணவர்கள் மத்தியில் தடுப்பூசியை நிராகரிப்பதற்கான சாத்தியம் உள்ளதாக துணைக் கல்வியமைச்சர் 1 டத்தோ டாக்டர் மா ஹாங் சூன் கூறினார்.
எனினும், தங்கள் பிள்ளைகள் தடுப்பூசியை பெற அனுமதிப்பதற்கு இன்னும் தயாராகாத பெற்றோர்களின் எண்ணிக்கை மிகவும் குறைவாக உள்ளதாக அவர் சொன்னார்.
பள்ளிக்கு வந்து கல்வி கற்பதற்கு எல்லா மாணவர்களுக்கு உரிமை உள்ளது. தடுப்பூசி பெறவில்லை என்பதற்காக அவர்கள் பள்ளிக்கு வருவதை கல்வியமைச்சு தடுப்பதற்கு எந்த காரணமும் கிடையாது. தடுப்பூசியை நிராகரிப்பது மாணவர்கள் அல்ல. மாறாக, பெற்றோர்கள்தான். ஆகவே,அவர்களுக்குதான் இவ்விவகாரம் தொடர்பில் ஆலோசக சேவை வழங்கப்படும் என்றார் அவர்.
இளையோருக்கான தடுப்பூசி திட்டம் தொடர்பில் நடைபெற்ற செய்தியாளர் கூட்டத்தில் அவர் இதனைத் தெரிவித்தார்.
இளையோர் தடுப்பூசித் திட்டத்திற்கான முன்பதிவு நடவடிக்கையை விரைவுபடுத்தும்படி நாடு முழுவதும் உள்ள பள்ளிகளுக்கு மாவட்ட கல்வி இலாகாக்கள் மூலம் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் சொன்னார்.
கோவிட்-19 நோய்த் தொற்றிலிருந்து தங்களையும் தங்கள் பிள்ளைகளையும் காக்க தடுப்பூசி பெற வேண்டியதன் அவசியத்தை பெற்றோர்களுக்கு உணர்த்துவதற்கு கல்வியமைச்சு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.


