பொந்தியான், செப் 22- சிலாங்கூர் மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரியின் தந்தையார் ஷாரி மொக்சின் நேற்று காலமானார். அவரது நல்லுடல் இன்று காலை 10.40 மணியளவில் பெனுட், கம்போங் பாரிட் அசாம் முஸ்லீம் மையத்து கொல்லையில் நல்லடக்கம் செய்யப்பட்டது.
நல்லடக்கச் சடங்கின் போது அமிருடின் ஷாரி தலைமையில் துவா ஒதும் சடங்கு நடைபெற்றது. இதில் அவரது நெருங்கிய குடும்ப உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். எஸ்.ஒ.பி. விதிமுறைகளைப் பின்பற்றி இந்த சடங்கு நடத்தப்பட்டது.
ஜொகூர் மந்திரி புசார் டத்தோ ஹஸ்னி முகமது, மாநில சட்டமன்ற சபாநாயகர் சுஹாய்ஸான் கயாட் ஆகியோர் மறைந்த ஷாரிக்கு இறுதி அஞ்சலி செலுத்தினர்.
67 வயதான ஷாரி மாரடைப்பு காரணமாக நேற்று மாலை 5.30 மணியளவில் காலமானார். வடிகால், நீர் பாசனத்துறையில் பணியாற்றி ஓய்வு பெற்ற ஷாரிக்கு உரியான் பெர்மின் (வயது 67) என்ற மனைவியும் ஆறு பிள்ளைகளும் 22 பேரப்பிள்ளைகளும் உள்ளனர். அமிருடின் ஷாரி குடும்பத்தில் இரண்டாவது பிள்ளையாவார்.


