ஷா ஆலம், செப் 20- அடுத்தாண்டு பள்ளித் தவணை திறக்கப்படுவதற்குள் 80 விழுக்காட்டு இளையோர் தடுப்பூசியை முழுமையாகப் பெற்றிருப்பதை சுகாதார அமைச்சு உறுதி செய்யும்.
வரும் நவம்பர் மாதத்திற்குள் 12 முதல் 17 வயது வரையிலான 60 விழுக்காட்டு இளையோர் குறைந்தது ஒரு டோஸ் தடுப்பூசியைப் பெற்றிருப்பதை தாங்கள் உறுதி செய்யவிருப்பதாக அதன் அமைச்சர் கைரி ஜமாலுடின் கூறினார்.
“பிக் ரெமாஜா“ எனப்படும் இளையோருக்கான தேசிய கோவிட்-19 தடுப்பூசித் திட்டம் முன்கூட்டியே அதாவது சரவா மாநிலத்தில் செப்டம்பர் 8ஆம் தேதியும் லபுவானில் செப்டம்பர் 11 ஆம் தேதியும் ஆரம்பிக்கப்பட்டு விட்டதாக அவர் தெரிவித்தார்.
சரவா மற்றும் லபுவானில் பெரியவர்களுக்கான தடுப்பூசித் திட்டம் 80 விழுக்காட்டை நிறைவு செய்து விட்டதால் அவ்விரு மாநிலங்களிலும் இளையோருக்கான தடுப்பூசித் திட்டத்தை அமல்படுத்த சி.ஐ.டி.எப். எனப்படும் கோவிட்-19 தடுப்பூசி சிறப்பு பணிக்குழு அனுமதி வழங்கியுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
சபா மாநிலத்தில் இளையோருக்கான தடுப்பூசித் திட்டம் இம்மாதம் 16 ஆம் தேதி தொடங்கவுள்ளது. இம்மாநிலத்தில் பெரும்பாலான இளையோர் உட்புறங்களில் வசிப்பதால் அப்பகுதியை சென்றடைவதற்கு கால அவகாசம் தேவைப்படுகிறது என்றார் அவர்.


