ஷா ஆலம், செப் 20- கோவிட்-19 நோயாளிகளுக்கு சுயமதிப்பீட்டு கருவிகளை விநியோகிக்கும் சிலாங்கூர் அரசின் திட்டத்தை மத்திய அரசு பின்பற்றுகிறது என்று மந்திரி புசார் டத்தோ ஸ்ரீ அமிருடின் ஷாரி கூறினார்.இவ்விவகாரம் தொடர்பில் பிரதமர் டத்தோ ஸ்ரீ இஸ்மாயில் சப்ரி யாக்கோப் வெளியிட்ட அறிவிப்பு கோவிட்-19 நோய்த் தொற்றை கட்டுப்படுத்துவதற்கு மாநில அரசு இதுநாள் வரை மேற்கொண்ட நடவடிக்கைகள் ஆக்ககரமான பலனை தந்துள்ளதை புலப்படுத்துகிறது என்று அவர் சொன்னார்.
கடந்த ஜூலை மாதம் கித்தா சிலாங்கூர் திட்டத்தில் அறிவித்தபடி நோய்த் தொற்று கண்டவர்களுக்கும் அவர்களுடன் நெருங்கிய தொடர்பில் இருந்தவர்களுக்கும் மாநில அரசு கோவிட்-19 சுயமதிப்பீட்டு கருவிகளை விநியோகிக்கும் என்று அவர் தெரிவித்தார்.
இந்த சுயமதிப்பீட்டு கருவியில் ஆக்சிமீட்டர் மற்றும் முகக் கவசம் ஆகியவை உள்ளன. தேவைப்படுவோருக்கு வழங்குவதற்காக 60,000 சுயபரிசோதனை கருவிகள் விநியோகிக்கப்படும் என்று மாநில அரசு அண்மையில் அறிவித்திருந்ததையும் அமிருடின் சுட்டிக்காட்டினார்.
இக்கருவிகள் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் சேவை மையங்கள் வாயிலாக பொதுமக்களுக்கு விநியோகிக்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
கோவிட்-19 நோய்த் தொற்று எண்டமிக் யுகத்தில் நுழைவதற்கு தயாராகும் வகையில் பி40 தரப்பினருக்காக 36 லட்சம் கோவிட்-19 பராமரிப்பு தொகுப்பு ஏற்பாடு செய்யப்படும் என்று இஸ்மாயில் நேற்று கூறியிருந்தார்.
ECONOMY
கோவிட்-19 நோயாளிகளுக்கு சுயமதிப்பீட்டு கருவி: சிலாங்கூரை மத்திய அரசு பின்பற்றுகிறது
20 செப்டெம்பர் 2021, 2:31 AM


