கோலாலம்பூர், செப் 17- பொழுது போக்கு மையங்களுக்கு வருவோர் இரண்டு டோஸ் தடுப்பூசியை முழுமையாகப் பெற்றிருக்காவிட்டால் அம்மையங்களிலிருந்து வெளியேறும்படி அவர்களுக்கு உத்தரவிடப்படும் என்று காவல் துறை கூறியுள்ளது.
வருகையாளர்கள் தடுப்பூசியை முழுமையாகப் பெற்றிருப்பதையும் எஸ்.ஒ.பி. விதிமுறைகளை முறையாக கடைபிடிப்பதையும் உறுதி செய்ய மக்கள் அதிகம் கூடும் பொழுதுபோக்கு மையங்களில் கண்காணிப்பு பணிகளை தீவிரப்படுத்தும்படி போலீசார் பணிக்கப்பட்டுள்ளதாக புக்கிட் அமான் உள்நாட்டு பாதுகாப்பு மற்றும் பொது ஒழுங்குத் துறையின் இயக்குநர் டத்தோ மாஸ்தோர் முகமது அரிப் கூறினார்.
அச்சோதனைகளின் போது தடுப்பூசியை முழுமையாகப் பெறாதவர்கள் கண்டுபிடிக்கப்படும் பட்சத்தில் அவர்களுக்கு எச்சரிக்கை வழங்கப்படும் என்பதோடு அங்கிருந்து வெளியேறும்படி உத்தரவும் பிறப்பிக்கப்படும் என்று அவர் சொன்னார்.
தற்போதைய நோய்த் தொற்று காலத்தில் மக்கள் மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளதை நாங்கள் உணர்ந்துள்ளோம். ஆகவே, சட்ட அமலாக்கத்தில் மனிதாபிமானத்தைக் கடைபிடிக்க விரும்புகிறோம் என்றார் அவர்.
மலேசிய தினத்தை முன்னிட்டு நேற்று பொது விடுமுறை அறிவிக்கப்பட்டிருந்தாலும் கடந்த சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளைக் காட்டிலும் நேற்று பொழுது போக்கு மையங்களில் வருகையாளர்கள் எண்ணிக்கை குறைந்து காணப்பட்டதாக அவர் தெரிவித்தார்.
இதனிடையே, சுங்கை பாஞ்சாங் நீர் வீழ்ச்சி பகுதியில் மேற்கொள்ளப்பட்ட சோதனையில் எஸ்.ஒ.பி. விதிகளை மீறிய குற்றத்திற்காக எழுவருக்கும் போக்குவரத்து குற்றங்களுக்காக 46 பேருக்கும் சம்மன் வழங்கப்பட்டதாக கேம்பாக் மாவட்ட போலீஸ் தலைவர் ஏசிபி ஜைனால் முகமது முகமது கூறினார்.


