ஷா ஆலம், செப்டம்பர் 15: தேசிய மீட்சி மன்றத்தில் தோல்வி அடைந்த ஒருவருக்கு பதிலாக அம்மன்றத்திற்கு தலைமை வகிக்க, அதிக ஆற்றலும், அனுபவமும் கொண்டவரை அரசாங்கம் நியமிக்க வேண்டும் என்று எதிர்க்கட்சித் தலைவர் கோரிக்கை விடுத்தார். பிரதமர் டத்தோஸ்ரீ இஸ்மாயில் சப்ரி, பக்காத்தான் ஹரப்பானுடனான சந்திப்பில் (பக்காத்தான்) அந்த பதவிக்கு ஒரு புதிய நபர் நியமிக்கப்படுவார் என்று தெரிவித்தார் என்றார் டத்தோ ஸ்ரீ அன்வர் இப்ராஹிம்." தேசிய மீட்சி மன்றத்திற்கு ஒரு புதிய வடிவத்தை கொடுப்பது நல்லது,” அப்பதவிக்கு நாங்கள் எதிர்க்கட்சியை சேர்ந்தவரை முன்மொழியவில்லை. ஆனால் ஆற்றலும் அனுபவமுள்ள ஒரு கைதேர்ந்தவரை, அரசாங்கம் நியமிப்பதையே நாட்டு மக்கள் விரும்புவர் என்றார் அவர்.
"ஆனால் ஏற்கனவே தோல்வி கண்ட நபரை, தான் செய்வதே சரி, நாடாளுமன்றம் உட்பட எந்த குழுவின் ஆலோசனையும் தேவையில்லை என்று அவசரக் காலத்தில் நாட்டை முடக்கிப் போட்ட நபரிடம் மீண்டும் அப்பொறுப்பை ஒப்படைக்காதீர்கள்.
அந்த நபரிடம் நாடு மீட்சியுற, கோவிட்-19 பிரச்சினையைத் தீர்க்க கூடிய எந்த புதிய திட்டத்தையும் எதிர்பார்க்க வேண்டாம்" என்று போர்ட்டிக்சன் எம்.பி.யும் எதிர்க்கட்சி தலைவருமான டத்தோ ஶ்ரீ அன்வார் இன்று டேவான் ராக்யாட் விவாதத்தில் கூறினார்.
செப்டம்பர் 4 ஆம் தேதி, அரசாங்கத்தின் தலைமைச் செயலாளர் டான்ஸ்ரீ முகமட் ஜுகி அலி, முன்னாள் பிரதமர் டான் ஸ்ரீ மொகிதீன் யாசினை, தேசிய மீட்சி மன்றத்தின் தலைவராக நியமிக்கப்படுவதாக அறிவித்தார் என்பது அனைவரும் அறிந்ததே!


