ஷா ஆலம், செப் 14- வெள்ளத்தைத் தடுக்க உலுயாம், பத்து 30 பகுதியில் 42 லட்சம் வெள்ளி செலவில் வடிகால் சீரமைப்புத் திட்டம் மேற்கொள்ளப்படவுள்ளது.
இத்திட்டத்தின் வாயிலாக கடந்த ஒன்பது ஆண்டுகளாக இப்பகுதியில் நிலவி வரும் வெள்ளப் பிரச்னைக்கு தீர்வு காண முடியும் என்று கோல குபு பாரு சட்டமன்ற உறுப்பினர் லு கீ ஹியோங் நம்பிக்கைத் தெரிவித்தார்.
இத்திட்டத்தை மேற்கொள்வதற்கு சிலாங்கூர் மாநில வடிகால் மற்றும் நீர்பாசனத் துறை அனுமதி வழங்கியுள்ள நிலையில் இந்த சீரமைப்புப் பணிகள் அடுத்தாண்டு ஏப்ரல் மாதம் தொடங்கி 24 மாதங்களில் முற்றுப் பெறும் என்று அவர் தெரிவித்தார்.
நில உரிமையாளர் ஒருவர் சுவர் எழுப்பிய காரணத்தால் கடத்ந 2012 ஆம் ஆண்டு முதல் இப்பகுதி மக்கள் வெள்ளப் பிரச்னையை எதிர்நோக்கி வருவதாக அவர் சொன்னார்.
இவ்விவகாரத்தை மாநில வடிகால் மற்றும் நீர்பாசனத் துறையின் கவனத்திற்கு தாம் கொண்டுச் சென்றதைத் தொடர்ந்து மேம்பாட்டுப் பணிகளை மேற்கொள்ள மானியம் வழங்க அத்துறை ஒப்புதல் அளித்ததாக அவர் குறிப்பிட்டார்.
இரு வீடமைப்புப் பகுதிகளைச் சேர்ந்த சுமார் 100 குடும்பங்கள் நீண்ட காலமாக எதிர்நோக்கி வரும் வெள்ளப் பிரச்னைக்கு இந்த சீரமைப்பு பணிகள் வாயிலாக தீர்வு காண முடியும் எனத் தாம் நம்புவதாக அவர் மேலும் சொன்னார்.


