ஷா ஆலம், செப் 14- கோவிட்-19 நோய்த் தொற்றைக் கட்டுப்படுத்துவற்காக அமல்படுத்தப்பட்ட 181 நிலையான வழிகாட்டு நெறிமுறைகள (எஸ்.ஒ.பி.) அரசாங்கம் 10ஆக குறைக்கவுள்ளது.
நாடு வரும் அக்டோபர் மாதம் எண்டமிக் (ஆண்டு முழுவதும் எல்லா இடங்களிலும் காணப்படும் நோய்) கட்டத்திற்கு நாடு நுழையும் போது பொதுமக்கள், தொழில்துறையினர் மற்றும் அமலாக்க அதிகாரிகள் சுலபமாக புரிந்து கொள்வதற்கு ஏதுவாக இந்த எஸ்.ஒ.பி. விதிமுறைகளின் எண்ணிக்கை குறைக்கப்படுவதாக தற்காப்புக்கான மூத்த அமைச்சர் டத்தோஸ்ரீ ஹிஷாமுடின் துன் ஹூசேன் கூறினார்.
தற்காப்பு அமைச்சர் சுகாதார அமைச்சர், தொடர்பு மற்றும் பல்லுடக அமைச்சர் ஆகியோரை உள்ளடக்கிய கோவிட்-19 மீதான கூட்டத்தில் இவ்விவகாரம் தொடர்பில் முடிவெடுக்கப்பட்டதாக அவர் சொன்னார்.
விதிமுறைகளைத் தளர்த்த கொள்கையளவில் இணக்கம் காணப்பட்டுள்ளது. இதன் தொடர்பான அறிவிப்பை பிரதமர் டத்தோஸ்ரீ இஸமாயில் சப்ரி யாக்கேப் கூடிய விரைவில் வெளியிடுவார் என்றார் அவர்.
சுற்றுலாத் துறை மற்றும் உடற்பயிற்சி மையங்களின் செயலாக்கம் தொடர்பில் கூடுதல் தளர்வுகளை அறிவிப்பது குறித்து அரசாங்கம் பரிசீலித்து வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
எனினும், இவ்விவகாரம் மீது அரசாங்கம் இடர் மதிப்பீட்டு ஆய்வினை முன்னதாக மேற்கொள்ளும். குறிப்பாக, லங்காவியில் அமல்படுத்தப்பட்டுள்ள முன்னோடித் திட்டம் நோய்த் தொற்று பரவலுக்கு வித்திடவில்லை என்பது நிரூபிக்கப்பட வேண்டும் என்றார் அவர்.


