ஷா ஆலம், செப் 14- தங்கள் ஊழியர்கள் தடுப்பூசியைப் முழுமையாகப் பெற்றிருப்பதை உறுதி செய்யும் விஷயத்தில் மிகுந்த கவனம் செலுத்தும்படி முதலாளிகள் வலியுறுத்தப் பட்டுள்ளனர்.
வர்த்தக நடவடிக்கையைத் தொடங்குவதற்கு முன்னர் தங்கள் ஊழியர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதை அவர்கள் உறுதி செய்ய வேண்டும் என்று பத்து தீகா சட்டமன்ற உறுப்பினர் ரோட்சியா இஸ்மாயில் கூறினார்.
தொழிலாளர்களுக்குத் தடுப்பூசி செலுத்துவதில் முதலாளிகள் காட்டும் அலட்சியப் போக்கு நோய் எதிர்ப்பாற்றல் கொண்ட சமூகத்தை உருவாக்கும் அரசாங்கத்தின் முயற்சிக்கு பாதிப்பை உண்டாக்கும் என்று அவர் சொன்னார்.
இரண்டு டோஸ் தடுப்பூசியை செலுத்திக் கொள்ளாதவர்களை சில வணிக மையங்களில் அனுமதிப்பதில்லை என்று அரசாங்கம் முடிவு செய்துள்ளது. அதே சமயம், அந்த வணிக மையங்களில் உள்ள தொழிலாளர்களை தடுப்பூசியை முழுமையாகப் பெறாதது சோதனை நடவடிக்கைளில் தெரிய வந்துள்ளது என்றார் அவர்.
பணியாளர்கள் தடுப்பூசியை முழுமையாகச் செலுத்திக் கொள்ளாத வணிக மையங்களுக்கு வாடிக்கையாளர்கள் செல்லக் கூடாது என்பதோடு அவர்களுக்கு எதிராக புகாரும் செய்ய வேண்டும் என்பது எனது கோரிக்கையாகும் என்று மாநில ஆட்சிக்குழு உறுப்பினருமான அவர் தெரிவித்தார்.
வாடிக்கையாளர்கள் மட்டுமின்றி வியாபார மையங்களின் பணியாளர்களும் தடுப்பூசியைப் பெற்றிருப்பதை உறுதி செய்வதில் மாநில அரசு தீவிரமாக செயல்பட வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
இங்குள்ள பாடாங் ஜாவாவில் நடைபெற்ற பத்து தீகா தொகுதி நிலையிலான நடமாடும் தடுப்பூசித் திட்டத்தைப் பார்வையிட்டப் பின்னர் செய்தியாளர்களிடம் அவர் இதனைத் தெரிவித்தார்.


